பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

77

கோயிலுக்குள் ஒரு கோயிலை, இளமைநாயகிக்கு பின்னால் யாரோ எடுத்திருக்க வேண்டும். விருத்தாம்பிகையோடு பாலாம்பிகையும் நிலைத்துவிடுகிறார்கள் இக்கோயிலில். இதை வைத்து மக்கள் கயிறு திரிக்கவும் வகை செய்து விடுகிறார்கள்.

நாம் இன்று செல்வது, விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேதராகத் திரு முதுகுன்றத்தில் கோயில் கொண்டிருக்கும் பழமலை நாதரைக் காணவே. விழுப்புரம், திருச்சி கார்டு லைனில், விருத்தாசலம் சந்திப்பில் இறங்கிப் போகலாம். பாஸஞ்சர் வண்டி என்றால் விருத்தாசலம் டவுன் ஸ்டேஷனில் இறங்கியும் போகலாம். எங்கிருந்து போனாலும் ரயிலை விட்டு இறங்கியதுமே பெரிய கோபுரங்கள் தெரியும். கோயிலை அடுத்து ஓடும் மணிமுத்தாற்றைக் கடக்க நல்ல பாலம் ஒன்றும் உண்டு. பாலத்துக்கும் கிழக்கே நின்று கோபுர தரிசனம் செய்து விட்டு, கோயில் வாயிலுக்கு வரலாம். விருத்தாசலம், முதுகுன்றம், பழமலை என்றெல்லாம் சொல்கிறார்களே ஆதலால் கோயில் ஏதோ ஒரு மலை மீது இருக்கும் போலும் என்ற எண்ண வேண்டாம். கோயில் நல்ல கெட்டியான தரையிலேயே கட்டப்பட்டிருக்கிறது.

கோயில் மிகப் பெரிய கோயில். மூன்று மதில்கள் பிராகாரங்களுடன் கூடியது. புறச் சுற்று மதில் 660 அடி நீளமும் 392 அடி அகலமும் உடையது. உயரம் இருபத்தாறு அடி. கனம் நான்கு அடி என்றால் மதில் எவ்வளவு உறுதியானது என்று தெரிந்து கொள்ளலாம் தானே? நான்கு திசைகளுக்கும் நான்கு வாயில்கள்; வாயில்கள் ஒவ்வொன்றிலும் ஏழு நிலைகள் உள்ள பெரிய கோபுரங்கள் எல்லாம் கம்பீரமாக நிற்கின்றன. கீழைக் கோபுர வாயிலுக்கு முன்னால் வெளியே பதினாறு கால் மண்டபம் ஒன்று. கோபுர வாயிலின் இரு பக்கத்திலும் பரதநாட்டியப் பெண்மணிகள் 72 பேர், ஆம் கற்சிலைகளாகத் தான். இந்த