பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வேங்கடம் முதல் குமரி வரை

உலகீன்ற அம்மை உமை, உலகம் உய்ய, கைலையிலிருந்து இறங்கி வந்து கம்பை நதிக் கரையிலே மணலால் லிங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டு பூஜை செய்கிறாள். அந்தச்சமயத்தில் கம்பை நதி பெருக்கெடுத்துவர அம்மை நடுக்கமுற்றாலும், நம்பிக்கையை இழக்காமல், லிங்கத் திரு உருவையே கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். அம்மையின் வளை அணிந்த கைகளால் இறுகத் தழுவியதால், அவளது வளைத் தழும்பும் முலைத் தழும்பும் பெற்ற பெருமான், தழுவக் குழைந்த தலைவனாக அம்மைக்கு அருள் பாலித்தார் என்பது வரலாறு.

இத்தலத்தில் பிருதிவிஉருவில் இருக்கும் மூலத்திரு உருவைவிடப் பிரசித்தி பெற்றவர் ஏகாம்பரநாதர். இவர் கர்ப்பகிருஹத்துக்குப் பின்னுள்ள மாமரத்தடியில் தம்துணைவி ஏலவார் குழலியுடன் கொலுவிருக்கிறார். நான்கு வேதங்களும் சேர்ந்தே இந்த மாமரமாக உருவாகியிருக்கிறது என்பது புராண வரலாறு. மாமரத்தின் நான்கு கிளைகளில் பழுத்து உதிரும் கனிகளுக்கு நான்கு விதமான சுவை என்பர், உண்டு மகிழ்ந்தவர்கள். இந்தக் கனிகளை உண்பவர்களுக்குப் புத்திரப் பேறு சித்திக்கும் என்பது நம்பிக்கை.

கம்பமாக லிங்கத் திரு உருவில் இருப்பவன் கம்பன் என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை. இல்லை, கம்பை நதிக் கரையில் நிற்பவன் ஏகம்பன் என்று சொல்வதிலும் தவறில்லை. இது போக, ஏகம்பனுக்கும், ஏகாம்பரனுக்குமே விளக்கம் தருவார்கள் அறிஞர்கள். கம்பன் என்றால் நடுக்கம். நடுக்குற்ற உமையால் தழுவப் பெற்றதால் ஏகம்பன் ஆனான் என்றும், ஆம்ரம் என்றால் மாமரம், மாமரத்தடியில் வீற்றிருப்பவர் ஏகாம்பரர் ஆனார் என்றும் விளக்கங்கள் வளரும்.

இவற்றை எல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டு விடலாம். இந்தக் கோயிலில் இந்த ஏகம்பனுக்குப் போட்டியாக எழுந்துள்ளவர் மூவர். அவர்கள் மூவரும் முறையே வெள்ளக்