பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஏகம்பன் கோயில் கொள்ளும் இந்தக் காஞ்சி மிக்க சரித்திரப் பிரசித்தி பெற்றதொரு நகரம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே சோழ நாட்டை ஆண்ட கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவளவன், சாத்தன் அருளல் காஞ்சியில் செண்டு (சவுக்கு) பெற்றான் என்றும், அந்தச் செண்டு கொண்டே இமயத்தை அடித்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறும்.

பெரும்பாணாற்றுப் படையில் உருத்திரங் கண்ணனாராலும், க்ஷேத்திர வெண்பாவில் ஐயடிகள் காடவர்கோனாலும், பின்னர் மூவர் முதலிகளாலும் பாடப் பெற்ற பெருமையுடையது காஞ்சி. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், பரமேசுவர வர்மன், ராஜ சிம்மன் முதலிய பல்லவ மன்னர்கள் இருந்து ஆண்ட, கலை வளர்த்த தலமாகவும் இருந்திருக்கிறது.

இவற்றை யெல்லாம் விடச் சீன யாத்திரீகன் கியூன் சாங், இந்த நகரத்துக்குகி.பி. 640 இல் வந்து, பெளத்த சமய உண்மைகளைப் பரப்பினான் என்றும், இந்நகரத்தின் பெருமைகளை விரிவாக எழுதி வைத்தான் என்றும் அறிகிறோம். அதோடு இங்கு ஓர் அரிய சர்வகலாசாலையே அந்தக் காலத்தில் இருந்தது என்றும், இங்கிருந்தே வடநாட்டு நாலந்தா பல்கலைக் கழகத்துக்குத் தர்மபாலர் என்ற பேராசிரியர் சென்றார் என்றும், சரித்திரம் கூறுகிறது.

இதெல்லாம் தெரிந்துதானோ என்னவோ, 'கல்வி வரையிலாக் கச்சி' என்றார் அப்பர். இந்தப் 'பாட்டினில் அடங்காக்' காஞ்சியின் பெருமையைக் காஞ்சி புராணத்திலே விரிவாகக் காணலாம்.

இந்தப் பரந்த வையகமே கழனி, அந்த வையத்தின் தேயங்களேநன்செய்கள், அந்தச்செய்யிலே வளரும் கரும்பே தொண்டை வளநாடு, அக்கரும்பின் சாறால் ஆகிய கட்டியே கச்சி, அச் சர்க்கரைக் கட்டியில் உள்ள இனிய சுவையே கச்சி ஏகம்பன் கோயில் என்று கூறும் ஒரு பழம் பாட்டு. இனி அச் சர்க்கரைக் கட்டியைச் சுவைப்பது உங்கள் பேறு.