பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீர்த்தம், அபிஷேகம், அலங்காரம் எல்லாம் பக்திக்கும் ஞானத்திற்கும் இன்றியமையாத சாதனங்கள் என்பதைக் கட்டுரைகள் நிலை நாட்டுகின்றன.

மேலும் ஆசிரியருடைய சமரச நிலை பெரிதும் போற்றத் தக்கதாக இருக்கிறது. வைஷ்ணவ வேஷம் போட்டுக் கொண்டு, சைவத்தை ஒரே செந்துக்காகத் தூக்குவார். சைவ வேடம் பூண்டு, வைஷ்ணவ விளக்கம் செய்வார். இப்படி ஆயிரம் மூர்த்திகளைப் பற்றியும் பேசினாலும், இறைவன் ஒருவன்தான் என்ற உண்மையையும் உணர வைத்து விடுகிறார், எப்படியோ.

ரஸிகமணி டி.கே.சி. சொல்லுவார்கள்: 'பொதுவாக, ஸ்தல யாத்திரை என்றால், கோயில் குளம், மூர்த்தி, பக்தர் குழாம் இவைகளை அனுபவிக்கப் போவதுதான். அதில் நல்ல ஆனந்த அனுபவம் உண்டு!' என்று.

அத்தகைய ஆனந்த அனுபவத்தை ஸ்தல யாத்திரை போகக் கொடுத்து வைக்காவிட்டாலும் - இந்த நூலைப் படிப்பதன் மூலம் நான் அடைகிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் நான் பெற்ற இன்பத்தை அடைவார்கள் என்றும் நம்புகின்றேன்.

ஜட்ஜ் பங்களா
வேலூர் 16-3-60

எஸ். மகராஜன்