பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வேங்கடம் முதல் குமரி வரை

பிராகாரம் எல்லாம் ஒரே தண்ணீர். இந்தத் தண்ணீர் வருவது மேல் பிராகாரத்தில் உள்ள ஒரு சிறு நந்தியின் வாய் வழியாக இந்த வட்டாரத்தின் நீர்நிலை (Water Table) உயர்ந்திருப்பது கண்டு, எந்த இடத்தில் நந்தியை அமைத்தால் தண்ணீர் இடைவிடாது அதன் வாயினின்றும் வழியும் என்று கண்டிருக்கிறான், கலைஞன்.

நந்தியை அமைத்ததோடு, கோயிலையும் அதற்குப் பிராகாரங்களையும் அமைத்து, அந்தக் கோயிலுக்குள் கங்காதரரையுமே பிரதிஷ்டை செய்திருக்கிறான். தண்ணீர் வழியும் இடம் கண்டு நந்தியை, நந்தி தீர்த்தத்தை யெல்லாம் அமைத்தவன், கிருஷ்ண ராஜ சாகரத்தில் காவிரித் தாயை வழிந்தோடும் கரகம் ஏந்தியவளாய் நிறுத்திய கலைஞனுக்கே ஒரு வழிகாட்டி,

இப்படி எப்போதும் நீர் ஊறிக்கொண்டே, வழிந்து கொண்டே இருக்கும் தலத்தை அன்று திரு ஊறல் என்றே அழைத்திருக்கிறார்கள் மக்கள். அந்த ஊறல் அமர்ந்த உமாபதியையே ஞானசம்பந்தர் பாடி மகிழ்ந்திருக்கிறார். இந்த ஊரே இன்று தக்கோலம் என்று வழங்குகிறது. இந்தத் தக்கோலத்துக்கு இன்று சென்றாலும் கங்காதரரைக் கண்டு வணங்கலாம். நந்தியையும் பார்த்து மகிழலாம்.

ஆனால் நந்திவாயிலிருந்து தண்ணீர் விழுவதைத்தான் காண முடியாது. அந்த வட்டாரத்திலே உள்ள நன்செய் புன்செய் நிலங்களில் எல்லாம் எண்ணிறந்த பம்பு செட்டுகள் அமைத்து, மின்சாரத்தின் உதவியால், கிடைக்கும் தண்ணீரை யெல்லாம் இறைத்துப் பயிர் செய்கிறார்கள் மக்கள். ஆதலால் வற்றாத தண்ணீரும் வற்றியது அங்கே கங்காதரரும் அபிஷேகமில்லாமலேயே நின்றுகொண்டிருக்கிறார் அங்கே. ஆம்! வயிற்றுச் சாமிக்குப் போய் மிச்சந்தானே மற்றச் சாமிகளுக்கு. இங்கோ வயிற்றுச் சாமிக்கே போதிய அளவு கிடைப்பதில்லையே.