பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வேங்கடம் முதல் குமரி வரை

சிலம்ப வீச்சினால். வீச்சு நின்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். சிலம்பு ஆடியவனின் லாவகத்தைக் கண்டு மூக்கிலே கை வைத்து நின்று விட்டார்கள் கடையிலும் தெருவிலும் கூடி நின்ற அத்தனை பேரும்.

இப்படி நடக்குமா என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆம்! அப்படி ஒன்றுமே நடக்கவில்லைதான். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்களேன்.

இத்தகைய கற்பனைச் சிலம்பக்காரனுக்கும் மேலான ஒரு சிலம்பக்காரனாக அல்லவா இருக்கிறான், இறைவன். கோடானு கோடி அண்டங்களைப் படைத்திருக்கிறான். அவைகளை உலகம், பாதாளம், வான்முகடு என்று நாலா பக்கமும் பரவி நிற்கவும், அவைகளெல்லாம் ஒரு நியதியில் சுழன்று கொண்டு, சுற்றிக் கொண்டு வரும்படியும் அமைத்திருக்கிறான். இவைகளுக்கு ஊடே, அவற்றின் ஊனாய் உயிராய் உணர்வாய் இயங்குகிறான். அற்புதமாய் நடனமே ஆடுகிறான் அவன்.

சரிதான். இப்படி ஆடும் நடனத்தில் ஒரு கால் தாளம் தவறிச் சிறிது பெயர்ந்து விட்டால் என்னவாகும்? பாதாளமே பெயர்ந்து விடாதா? இல்லை, வீசியாடும் கைகள்தாம் ஆட்டத்தின் வேகத்தில் அங்கே இங்கே பட்டுவிட்டால், வான் திசைகளே பெயர்ந்து விடாதா? இப்படி யெல்லாம் நேராமல் ஆடுகின்றானே, ஆடிக் கொண்டே இருக்கிறானே, கற்ப கோடி காலங்களாக இறைவன். இது இவனுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று என்று எண்ணுகிறோம்.

இதே வியப்பு காரைக்கால் அம்மையாருக்கும் அன்று ஏற்பட்டிருக்கிறது. நாம் வியந்து மூக்கில் விரலை வைத்து நின்றால், அம்மையோ தன் வியப்புக்கு விடை பெற இறைவனிடமே கேள்வி கேட்டிருக்கிறாள். அதையும் ஒரு நல்ல பாட்டிலேயே கேட்கிறாள்.