பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

139

அவர்கள் பணத்திற்கும் புகழுக்கும் உணர்வு நாணம் கடந்த நவீன காலப்பெண்கள் என்கிறேன் தான்) இந்தக் கதையையே,

கொடிய வெஞ்சினக் காளி குவலய முழுதும்
முடிவு செய்வன் என்று எழுந்த நாள்
முளரியோன் முதலோர் அடைய அஞ்சலும்
அவள் செருக்கு அழிவுற, அழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர்
வடவரைக் கண்டான்

என்று கந்த புராணம் கூறும்.

இப்படிக் காளியை வெல்ல ஆடிய ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம். அந்தத் தாண்டவம் ஆடியவரே ஆலங்காட்டு அடிகள். அவரது திருக்கோலம் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபையிலே செப்புச் சிலை உருவில் இருக்கிறது. எத்தனைதான் சொன்னாலும் அங்குள்ள அர்ச்சகர்கள் நிர்வாகிகள் வஸ்திரத்தைக் களைந்து ஊர்த்துவ மூர்த்தத்தைக் காட்ட மாட்டார்கள். பத்து முழத்துச் சோமனை இறைவன் திரு உருவில் வரிந்து வரிந்து கட்டி வைத்தே காட்டுவார்கள்.

ஆதலால் அன்பர்கள் இந்த ஊர்த்துவ தாண்டவக் கோலங் காணத் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கே போக வேணும். அங்குள்ள மகாமண்டபத்தில் ஒன்றுக்கு இரண்டாக அமைந்திருக்கும் ஊர்த்துவ தாண்டவரையே பார்க்கலாம், எளிதாக. அதில் ஒன்றையே பார்க்கிறீர்கள், இக்கட்டுரையிலே.

திருவாலங்காட்டுக்குச் செல்வதானால் ரயிலில் செல்வது தான் நல்லது, சென்னைக்கு மேற்கே அறுபது கிலோ மீட்டரில் திருவாலங்காடு ரயில்வே ஸ்டேஷன் , அங்கு இறங்கி வண்டி பிடித்துக் கொண்டு வடக்கே நான்கு கிலோ மீட்டர் சென்றால் கோயில் வாயிலில் கொண்டுபோய் விடும்.