பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

165

சொல்கிறாள். என்ன செய்வார், இந்த முனைப்பாடிப் புரவலனாம் சுந்தரர்? இறைவன் செய்யும் திருவிளையாட்டை நினைந்து, 'மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து மேவாது இங்கு யான் அகலேன்!' என்று சத்தியம் செய்து கொடுக்கிறார் சங்கிலிக்கு.

அன்று மகிழடிக்கு வந்த ஆதிபுரீசுவரர் அங்கேயே நிலைத்து விடுகிறார், அன்று முதல். அதனால் இந்த மகிழ மரத்துக்கே ஒரு சாந்நித்யம், அதனையே இறைவன் திருவுரு என்று வழிபாடு நடக்கிறது. மகிழடி சேவை இன்றும் பெரியதொரு திருநாளாகவே கொண்டாடப்படுகிறது. எவ்வளவு அரிய உண்மையை அழகான ஒரு கற்பனை விளக்குகிறது. கல்லிலும் புல்லிலும் மண்ணிலும் மரத்திலும் இறைவன் என்றுமே நிலைத்திருக்கிறான் என்ற அரிய உண்மையை விளக்க எழுந்த கதையாக இந்த மகிழடி சேவையைக் கொண்டால், எத்தனை இன்பம் நமது உள்ளத்துக்கு. சத்தியம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஒன்றும் நமக்கு இல்லாவிட்டாலும், நாமும் இந்த மகிழ மரத்தை மூன்று சுற்றுச் சுற்றி வணங்கிவிட்டு மேல் நடக்கலாம்.

இந்த மகிழ மரத்தை ஒரு சுற்றுச்சுற்று முன்பே நம் கண் முன் ஓர் அழகிய வடிவம் தோன்றும். அழகிய சிற்பம் என்பதை விட, அபூர்வம் என்பதிலேயே அதில் ஒரு கவர்ச்சி. பிரதான கோயிலின் கோஷ்ட விக்கிரகமாக வடக்கு நோக்கி இருப்பவர் திரிபாத திரிமூர்த்தி. தமிழ்நாட்டிலே இச்சிற்ப வடிவம் இரண்டே இரண்டு இடத்தில்தான். ஒன்று திருவானைக்காவில். மற்றொன்று திருவொற்றியூரில்.

திருவானைக்காவில் உள்ளதை விடப் பெரியவராக அழகுடையவராக இருப்பவரே திருவொற்றியூரில் உள்ள திரிபாத திரிமூர்த்தி. பிரமனும் விஷ்ணுவும் சிவனிடத்தே அடக்கம் என்னும் சிவபரத்துவத்தை விளக்க எழுந்த திரு உருவே இது. மான் மழுவேந்தி நிற்கும் சிவனுக்கு ஒரே