பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வேங்கடம் முதல் குமரி வரை

திருப்பாதம். அவர் உருவில் இருந்து கிளைத்து எழும் பிரமன், விஷ்ணுவுக்குமே ஒவ்வொரு திருப்பாதமே. யோக நிலையில் சிவன் நின்றால், கூப்பிய கையராய் மற்றவர் இருவரும் நிற்கிறார்கள். எல்லாம் ஒரே கல்லில் மூன்றடி உயரத்தில் சிற்ப உலகிலேயே ஓர் அதிசய உருவாக இருக்கிறது. இந்த அபூர்வ வடிவைக் காண்பது உங்களுக்கு எளிதாகலாம், இங்கு உள்ள படத்தின் மூலம்.

மகிழடியில் உள்ள ஆதி மூர்த்தியையும் அதனை அடுத்த கோஷ்ட விக்கிரகமாக எழுந்தருளியிருக்கும் திரிபாத திரு மூர்த்தியையும் வணங்கிவிட்டு இனிப் பிரதான கோயிலினுள் நுழையலாம். இக் கோயிலில் உள்ள லிங்கம் புற்று வடிவமாக இருக்கிறது. இவரையே படம் பக்க நாதர் என்கிறார்கள். பழைய பெயர் ஆதிபுரீசுவரர். அவர்தான் இன்று மகிழடிக்கு வந்து கோயில் கொண்டுவிட்டாரே!

இந்த ஆதிமூர்த்தியாம் படம்பக்க நாதரையே தேவாரம் பாடிய மூவரும் பாடித் துதித்திருக்கிறார்கள். 'விழிதரும் நீரும் மண்ணும் விசும்பொடு அனல் காலும் ஆகி, அளிதரு பேரருளாளர் அரனாகிய ஆதிமூர்த்தி' என்று சம்பந்தரும், 'உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றி ஊர் உடையகோ, என்று அப்பரும் பாடியவரையே, 'பந்தும் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தி வண்ணர் என்று சுந்தரர் பாடுகிறார்.

இந்த ஆதிமூர்த்தியின் அருமைத் துணைவியாம் வடிவுடை அம்மைக்குத் தனிச் சந்நிதி. அது கோயில் வடகிழக்கு மூலையில் இருக்கிறது. இது தவிரப் புதுப்பிக்கப்பட்ட கோயில் (ஆம்! அழகற்ற திருவுருவங்களாலும் இரும்புக் கம்பியும் கிராதிகளாலும் உருவானது) ஒன்று கோயிலின் மேலப் பிராகாரத்தில் இருக்கிறது.

கோயிலுக்குள்ளேயே வடக்கு நோக்கிய காளியம்மையும் அவள் முன் ஒரு பலிபீடமும் இருக்கின்றன. பலி