பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வேங்கடம் முதல் குமரி வரை

வணங்கி உய்வதே சிறந்தது எனக் கொண்டவர். இவரும் சொர்ணத்தால் சமைத்த மனக்கோயில் உள்ளே இறைவனை எழுந்தருளப் பண்ணி, ஒழியாத ஆனந்தமென்னும் திருமஞ்சனம் ஆட்டுவித்து, அறிவாகிய திருவிளக்கு ஏற்றி, அன்பை நிவேதித்து, நியதி தவறாது அருச்சனை செய்து, இறைவன் திருவடி அடைகிறார். இவரையே,

மறவாமையால் அமைத்த
மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனை உணரும்
ஒளிவிளக்கு சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும்
திருமஞ்சனம் ஆட்டி
அறவாளர்க்கு அன்பென்னும்
அமுதமைத்து அர்ச்சனைசெய்வார்

என்று சேக்கிழார் வியந்து பாடுகிறார். எல்லாக் காரியங்களும் மனத்தில் நிகழ்வதால், வாயினால் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை, வாயிலாராம் வாய் இல்லார்க்கு.

கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கியிருந்தாலும், மக்கள் எல்லாம் அதிகமாக உபயோகப்படுத்துவது மேற்குக் கோபுர வாயிலையே. கபாலீச்சரத்தானே மேற்கு நோக்கியவராகத்தானே இருக்கிறார். கோயில் கற்பகவல்லி சந்நிதி சிறப்பானதொன்று. கோயிலுக்குள்ளே பூம்பாலை, சம்பந்தர், வாயிலார் முதலியவர்களுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதிகள் உண்டு.

இன்னும் வைணவ முதல் ஆழ்வார் மூவரில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலமும் இதுவே. இவர் இங்கும், திருவல்லிக்கேணியிலுமாக இருந்து, தமிழ் வளர்த்திருக்கிறார். பெருமாளை நூறு பாடல்களால் பாடிப் பரவி இருக்கிறார்.