பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கிப் பெருகி நிறைகிறது. வான்மீகருக்குத் தாண்டவ! தரிசனமும் கிடைக்கிறது. இத்தகைய புகழ் பெற்று விளங்கும் ஊரே திருவான்மியூர்.

திருவான்மியூர் சென்னை அடையாற்றுக்குக் கிழக்கே மூன்று மைல் தூரத்தில் கடற்கரையில் உள்ள சிறிய ஊர். ஊர் சென்று சேரும்வரை நல்ல ரோடு உண்டு. கோயில் கிழக்குப் பார்க்க இருக்கிறது. ராஜ கோபுரம் இல்லை, ஆனால் ராயகோபுரம் உண்டு. (ராயகோபுரம் என்றால் கட்டமுனைந்து முற்றிலும் கட்டப்படாமல் விட்ட கோபுரத்தின் அடித்தளம் என்று அறிவோம் நாம் - மதுரையிலும் ஸ்ரீரங்கத்திலும் இந்த ராய கோபுரங்கள் உண்டல்லவா! )

அந்த ராய கோபுரத்தின் அடித்தளம் வாயில் மேல் தளம் வரை வளர்ந்து அப்படியே நின்று கொண்டிருக்கிறது - கோயில் வாசலுக்குக் கொஞ்சம் எட்டியே. இந்தக் கோபுரத்துக்கு வட பக்கத்திலே மிகப் பெரிய தெப்பக்குளம் இருக்கிறது. அதுவே வான்மீகருக்காக எழுந்த பாபநாசினி. ஆனால் நமது பாபங்களைக் கழுவித் துடைக்கப் போதிய தண்ணீர் இருப்பதில்லை அதில் ஆதலால் பாபத்தைக் கழுவக் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளாமலேயே கோயிலுள் நுழையலாம்.

கோயிலுள் நுழைந்ததும் நாம் முதலில் காண்பது அம்மை திரிபுரசுந்தரியின் சந்நிதியே, இந்தத் திரிபுரசுந்தரி நல்ல கம்பீரமான தோற்றம் உடையவள். அவளை வலம் வந்து வணங்கிவிட்டுப் பிரதான கோயிலுள் செல்லலாம்.

மேற்கு நோக்கிப் போகும் நம்மை வரவேற்கக் கிழக்கு நோக்கியே இருக்கிறார் தியாகராஜர், நடன மண்டபத்தில், இந்தத் தியாகராஜரே பதினெண் நடனங்கள் ஆடிக் காட்டியவர், வான்மீகருக்கு, வைகாசி மாதத்தில் நடக்கும் உற்சவத்தில் இந்த நடனக் கோலங்களை யெல்லாம் காணலாம் என்கிறார்கள்.