பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

201

இறைவனுக்கே பிரணவப் பொருளை விளக்கும் நிலையில் குரு மூர்த்தமாக எழுந்தருளும் கோலம் அல்லவா அது.

இந்த நிலையைச் சுதை உருவிலே சுவாமி மலையிலே செய்து வைத்திருக்கிறார்கள். அங்கு மைந்தனாய குமரன் முகத்திலே பால் வடிகிறதே ஒழிய, குருவாயிருப்பதிலே உள்ள மிடுக்கு இல்லை. ஆனால் இங்குள்ள மூர்த்தி தாமரைத் தவசில் இருந்தாலும், மடக்கிய கால் மேலே கையை நீட்டி உபதேச முறையில் ஒரு கையை உயர்த்தி அபயம் அருளும் நிலையில் இருக்கிறது.

இதை விடச் சிறப்பாகச் சீடனாக இருக்கும் சிவபிரான் கை கட்டி வாய் பொத்தி மகன் செய்யும் உபதேசமே என்றாலும், அதைப் பவ்வியமாகக் கேட்கும் நிலையையும் நன்றாக உருவாக்கியிருக்கிறான் சிற்பி.

'இரு என இருந்து, சொல் எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப்பாவையின் அத்தக அடங்கிச் செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைக்கும்' சீடனின் நிலையை நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் சொல்கிறார்.

அவர் சொல்லும் இலக்கணத்துக்கு இலக்கியமாய் அமைந்த சீடனாக இறைவன் இருப்பது பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தக்கது. இந்த இரண்டு வடிவங்களையுமே பார்க்கிறீர்கள், இங்கே. இவை எக்காலத்தன என்று சொல்ல இயலவில்லை. சோழர் காலத்து விக்கிரகமாக இருக்கலாம். இத்தலத்தில் முருகனைக் கண்டு வணங்கித் திரும்பும் போது, இத்தகைய அரிய சிற்ப வடிவங்களை உருவாக்கிய தமிழகத்துச் சிற்பிகளுக்குமே வணக்கம் செய்து திரும்பலாம்தானே.