பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

203

நிறைவேற்றுகிறான், பரந்தாமனும். ஆதலால்தான் அந்த அரசனான மகாபலியின் பெயராலேயே இந்த ஊர் மகாபலிபுரம் என்று பெயர் பெற்றிருக்கிறது.

இப்படி ஒரு வியாக்கியானம் மகாபலிபுரத்துக்கு. இந்த வியாக்கியானம் சொல்பவர்கள் கால் ஆங்கிலமும் அரைக்கால் இந்தியும் அரைத் தமிழும் பேசும் அங்குள்ள வழிகாட்டிகள் (guides).

இதோடு விடுவார்களா? அங்குள்ள கல் ரதங்களைக் காட்டி, 'இங்கு பஞ்ச பாண்டவர்கள் பாரத யுத்தம் முடிந்த பின் ரதங்களில் வந்திருக்கிறார்கள். அவர்களது அஸ்தினாபுரத்திலே ரதங்களை யெல்லாம் நிறுத்த இடம் இல்லை என்று கண்டு, இங்கேயே நிறுத்திவிட்டுப் புஷ்பக விமானத்தில் ஏறி ஊர் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நிறுத்திப் போன ரதங்கள்தான் இந்தப் பஞ்ச பாண்டவரதங்கள்!' என்பார்கள்.

மேலும், 'இது ஹஸ்பென்ட் எலிபன்ட், இது ஒய்ப் எலிபன்ட், இது சன் எலிபன்ட்?' என்றெல்லாம் விளக்கம் தருவார்கள். இவர்கள் சொல்லும் அத்தனையும் உண்மை அல்ல. சுத்த கப்ஸா என்று சரித்திரம் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஒரு பெரிய சித்திரக்காரப் புலி, சிற்பக் கலையில் அளவில்லாதகாதல் உடையவன். அவன் மகன் நரசிம்மவர்மனோ தந்தையையும் மிஞ்சிய ஆர்வம் உடையவன் - சிற்பிகளை ஆதரிப்பதிலே. மலைகளைக் குடைந்து குடைந்து, குடைவரைக் கோயில்களை உருவாக்கிக் கொண்டிருந்தான் மகேந்திரன் என்றால், மலைகளையே வெட்டிச் செதுக்கிக் கோயில்கள் விஹாரங்கள் ரதங்கள் எல்லாவற்றையும் நிர்மாணித்துக் கொண்டிருந்தான் நரசிம்மன்.

அவன் உருவாக்கி இருக்கிறான் - ஓர் அரிய சிற்பக் கலைக் கூடத்தை. சிற்பக்கலை விற்பன்னனான நரசிம்மன் நல்ல