பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

207

தரிசனம் கொடுக்கவே, பரந்தாமன் இந்தத் தல சயனனாக எழுந்தருளியிருக்கிறார். அன்று புண்டரீக மகரிஷி வேண்டிக் கொண்டபடி, என்றுமே தரையில் கிடக்கும் சயனனாகவே மக்களுக்குச் சேவை சாதிக்கிறார். இவர் வெறும் தல சயனன் மட்டும் அல்ல, ஜலசயனரும் கூடத்தான். தல சயனர் கோயில் கொண்டிருப்பது மாமல்லபுரம் ஊரில் உள்ள கோயிலில் என்றால், ஜலசயனர் கோயில் கொண்டிருப்பது கடற்கரைக் கோயிலிலே. இருவரையும் சேர்த்தே இருபத்தேழு பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கின்றார், மங்கை மன்னன்.

மாமல்லபுரத்திற்குச் சென்னையிலிருந்தும் செல்லலாம், செங்கற்பட்டிலிருந்தும் செல்லலாம். கார் வசதியில்லாதவர் பஸ்ஸில் ஏறித்தான் செல்ல வேண்டும். எப்படிச் சென்றாலும் செல்கின்றவர்களைத் தலசயனப் பெருமாளை வலம் வரச் செய்து, அவர் கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் காலி மனையில் இறக்கி விட்டு விடுவார்கள்.

கடற்கரைக் கோயில்

கொஞ்சம் பக்தி உடையவர்கள் என்றால், முதலில் தலசயன கோவிலுள் நுழைந்து, தலசயனரைத் தரிசித்து விட்டு, வெளியே வரலாம். இல்லை , நமக்கும் பக்திக்கும் வெகு தூரம், நமக்கும் கலைக்குமே நெருங்கிய தொடர்பு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள் எல்லாம் அப்படியே மேற்கு நோக்கி நடக்கவே புறப்பட்டு விடலாம்.