பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

19

ரயிலிலோ, காரிலோ போகிறவர்கள் எல்லாம் ஒன்று சேர்வது கீழைத் திருப்பதியில்தான். இங்குதான் ராமாநுஜரால் நிர்மாணிக்கப்பட்ட கோவிந்த ராஜன் கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றியே திருப்பதி நகரம். தேவஸ்தானத்தார் நடத்தும் கீழ்த்திசைக் கல்லூரி, சர்வ கலாசாலை, பெண்கள் பள்ளிக்கூடம், அநாத சரணாலயம் எல்லாம் இருப்பது இங்கேதான். வேங்கடேசுவர விசுவ வித்யாலயம், பாலிடெக்னிக் தொழிற் கல்விச்சாலை, யாத்திரீகர் தங்கப் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன.

இங்கிருந்து தென் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் திருச்சானூர். அங்குள்ள பத்மசரோவரம் என்ற குளத்தில் மலர்ந்த தாமரையிலேதான் பத்மாவதித் தாயார் தோன்றியிருக்கிறாள். குளத்துக்குக் கிழக்கே கோயில்.

இனி வேங்கட வாணனைத் தரிசிக்க மலை ஏறலாம். காலிலே வலுவுள்ளவர்கள், ஏழு மலை ஏறி, ஏழுமைல் நடந்து ஏழுமலையானிடம் ஒன்று சேரலாம். கால் கடுக்க நடக்க இயலாதவர்களுக்கு பஸ் வசதி செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் 'ஜம்' என்று காரிலேயே பதினோரு மைல் தூரத்தில் ஏழுமலையையுமே கடந்து விடலாம்.

இந்தத் திருமலைத் தொடருக்கு சேஷாசலம் என்று பெயர். கீழே இருந்து பார்த்தால் இம் மலைத் தொடர் உடலை வளைத்துப் படுத்துக் கிடக்கிற பாம்பு போலவே இருக்கும். இப்படி எல்லாம் ‘வான்கலந்த வண்ணன் வரை யை'க் கடந்து சென்றால், 'தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்' வந்து சேருவோம். மலை ஏறியதும், சுவாமி புஷ்கரணியில் ஒரு முழுக்குப் போட்டு, அக்குளத்தின் மேல் கரையில் உள்ள வராக மூர்த்தியைத் தரிசித்து விட வேண்டும். உருவிலே சிறிய மூர்த்தி என்றாலும், இவர்தானே ஆதி மூர்த்தி.