பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வேங்கடம் முதல் குமரி வரை

கையை உயர்த்தி, எல்லோரையும் மலை மேல் போய்ப் பார்க்க வேண்டியதைப் பாருங்கள் என்று சொல்லும் நிலையில் செதுக்கியிருக்கிறான் சிற்பி. (நாம்தான் மலையிலுள்ள சிற்பங்களைப் பார்த்து விட்டோமே, அந்தத் தகவலை அந்தத் துவார பாலகரிடம் சொல்லிவிட்டுக் கீழே இறங்கி விடலாம்)

பாலையைவிட்டு இறங்கி, அடிவாரத்தில் உள்ள சித்தாத்ரீ கணபதியையும் வணங்கிவிட்டு, ஊர் மத்தியில் இருக்கும் தாழக்கோயிலுக்குள் செல்லலாம். அங்கு செல்லாமல் திரும்ப முடியாதே. மலை மேல் தரிசிக்காத அம்பிகையை இங்குதானே தரிசிக்க வேண்டும்.

இந்தக் கோயிலை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. கோயிலுக்குள் பிரதான மூர்த்தி சிவலிங்க உருவில் அமைந்த பக்தவத்சலர்தான் என்றாலும், சிறப்பெல்லாம் அன்னை திரிபுர சுந்தரிக்குத்தான். இவளையே 'பெண்ணின் நல்லாள்' என்று பாடி மகிழ்கிறார் திருஞான சம்பந்தர்.

துணையல் செய்தான், தூயவண்டு
          பாழ்செயச் சுடர்கொன்றைப்
பிணையல் செய்தான், பெண்ணின்
          நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்தான், இலங்குளயில்
          மூன்றும் எரி உண்ணக்
கணையல் செய்தான் காதல் செய்,
          கோயில் கழுக்குன்றே

என்பதுதானே சம்பந்தர் தேவாரம். இந்தக் கோயிலில் வரப்பிரசாதி ஆன அம்பிகையைத் தரிசிப்பதோடு, ஏழு அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி கொடுக்கும் வீரபத்திரரையும் தரிசித்து வணங்கலாம்.