பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

வேங்கடம் முதல் குமரி வரை

எதிராஜவல்லி. உடையவர் அவதரித்த பின், பெருமாள் அவருடைய பெயரோடு தன் பெயரும் இணைந்திருக்க வேண்டுமென்று விரும்பி, எதிராஜநாதன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எதிராஜநாதனது மனைவியாம் லக்ஷ்மியும் தன் பெயரை எதிராஜவல்லி என்றே மாற்றிக் கொள்கிறாள். இத்தனை ஈடுபாடு எதிராஜனிடம், அந்தப் பெருமாளுக்கும், இந்தத் தாயாருக்கும். இவர் சர்வாலங்கார சுந்தரி.

இன்னும் இக்கோயிலில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு, கருடனுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதிகள் இருப்பது போல், நம்மாழ்வாருக்கு, ஆண்டாளுக்கு, திருக்கச்சி நம்பிகளுக்கெல்லாம் தனித் தனிச் சந்நிதிகள் உண்டு. இவைகளில் பிரசித்தமானது ஆண்டாள் சந்நிதியே. ஆண்டாளிடத்து, அவளது பாசுரங்களிடத்து உடையவருக்கு நல்ல ஈடுபாடு.

ஆண்டாளுக்கு ஓர் ஆசை - தான் பாடிய நாச்சியார் திருமொழிப் பிரபந்தத்தைத் திருமாலிருஞ்சோலையில் பெருமானுக்கு நூறு தடா நிறைய அக்கார அடிசல் பண்ணி, அத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென்று.

அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கிறார், உடையவர். அந்த ஆசை நிரம்பிய குதூகலத்தில், ஸ்ரீபெரும்பூதூர் மாமுனியாம் உடையவரை 'அண்ணா ' என்றே அழைக்கிறாள் ஆண்டாள். இதனாலேயே இவருக்குக் கோயிலண்ணன், திருப்பாவை ஜீயர் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. ஆண்டாளை மங்களா சாஸனம் பண்ணிய பெரியவர்கள், 'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!' என்றே வழிபடுகிறார்கள்.

இன்னும் இந்தக் கோயிலில் பார்க்க வேண்டியவை எவ்வளவோ உண்டு. அத்தனையும் பார்க்க நமக்கு நேரம் ஏது? அதிலும் இராமானுஜரை, அவரது தமர் உகந்த திருமேனி