பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வேங்கடம் முதல் குமரி வரை

ஏறி இருக்கிறார். இந்தத் தருமம் கும்பினி ஜாகீர் கலைக்டர் கர்னல் லயனல் பிளேஸ் துரை அவர்களது என்று கோயில் மண்டபத்திலே கல்லில் வெட்டி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் அங்கு செல்பவர்கள் காணலாம். கலெக்டர் வேண்டுகோளுக்கு இரங்கி ஏரிகாத்த இந்த ராமனையே ஏரிகாத்த பெருமாள் என்று இன்றும் அழைக்கிறார்கள் மக்கள்.

இத்தனை விஷயங்களும் தெரிந்த பின், இனி நாமும் கோயிலுள் செல்லலாம். கம்பன் கண்ட கோதண்டராமனை, ஏரி காத்த பெருமாளைக் கண்டு வணங்கலாம். கோயிலுக்கு முன்னாலே பெரிய திருக்குளம். குளக்கரையில் எல்லாம் நல்ல தென்னஞ் சோலைகள். இந்தச் சோலைகளுக்கும் ஏரிக்கரைக்கும் இடையிலே கோயில்.

இந்தக் கோயிலிலே மூலவர் கோதண்ட ராமன். உற்சவ மூர்த்தி இருவர், ஒருவன் கருணாகரன். மற்றொருவன் கோதண்டராமன். இவர்களிடையே ஒரு பெரிய வேற்றுமை. கோதண்டராமனோ ஏக பத்தினி விரதன். கருணாகரனோ இரண்டு பெண்டாட்டிக்காரன். ஸ்ரீதேவி பூதேவி சமேதனாக அவன் நிற்கிறான். ஆனால் இந்தக் கருணாகரன் ராமன் வணங்கிய நாராயணமூர்த்தி என்கிறார்கள்.

கோதண்டராமன் கோயிலுக்கு வலப்பக்கத்திலே ஜனகவல்லித் தாயாரின் கோயில், இதைத்தான் கலெக்டர் லயனல் பிளேஸ் கட்டியிருக்கிறார். இத்தலம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உயர்ந்த ஸ்தலம். அங்குதான் இராமானுஜருக்குப் பெரிய நம்பி பஞ்ச சம்ஸ்காரம் என்னும் வைஷ்ண தீக்ஷை செய்து வைத்திருக்கிறார். தீக்ஷை நடந்த இடம் மகிழ மரத்தடியில். அந்த மகிழ மரமும், ஸ்தலப் பெயரான வகுளாரண்யம் என்பதை நிலை நிறுத்த அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.