பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

23

பெருமக்கள் எல்லாம் கோயிலை விஸ்தரித்திருக்கிறார்கள் என்றாலும், விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகி இருக்கிறது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்கதேவனே விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்திருக்கிறான். கிருஷ்ண தேவராயனும் அச்சுததேவராயனும் பலதுறைகளில் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த வேங்கடவனைப் பற்றி ஒரு பெரிய விவாதம். இந்த மூர்த்தி முருகனே, பின்னர்தான் ராமானுஜர் அந்த மூர்த்தியைச் சங்கு சக்கரம் ஏந்த வைத்து ஸ்ரீனிவாசனாக மாற்றி விட்டார் என்பர் ஒரு சாரார். ஆதி முதலே அவன் ஸ்ரீனிவாசனே என்று அறுதி இட்டு உரைப்பார்கள் மற்றவர்கள்.

இது வேண்டாத விவாதம். தமிழ் நாட்டில் சைவ வைணவ வேற்றுமைகள் ஒரு காலத்தில் தலை தூக்கி நின்றிருந்தாலும், அந்த வேற்றுமைகளை யெல்லாம் மறக்கத் தெரிந்தவர்கள் தமிழ் மக்கள். 'உணர்வார் பார் உன்னுருவம் தன்னை ?' என்று முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கை யாழ்வார் மயக்கினாலும், பேயாழ்வாரோ,

தாழ் சடையும், நீள் முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழ்அரவும், பொன்நாணும் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இயைந்து

என்று முடிவு கட்டிச் சைவ வைஷ்ணவ ஒற்றுமையை நிலவச் செய்து வருகிறார். இது போதாதா, விவாதத்துக்கு முற்றுப் புள்ளிவைக்க?