பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேங்கடம் முதல் குமரி வரை

கூட இல்லை. இடக் கண்ணோ அம்மையின் கண், வலக்கண்ணோ , கண்ணப்பரது கண். ஆதலால் இரு கண்ணும் இழந்து நிற்கும் ஏழையாக வாழ்கிறார் அவர்.

காளத்தி வாழ் கண்டனை நினைத்தால், கண்ணப்பனை நினைக்கிறோம். நாம் மாத்திரம் என்ன? 'மனத்தகத்தான் தலைமேலான், வாக்கில் உள்ளான், வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான், இமையவர் தம் சிரத்தின் மேலான்' என்றெல்லாம் இறைவன் இருக்கும் இடங்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே போன அப்பரும், கடைசியில், 'காளத்தியான் அவன் என் கண்ணுளானே' என்றுதானே முடிக்கிறார். இறைவனது அருள் பொழியும் கண்ணை நினைத்தால் கண்ணப்பனை நினைக்கிறோம். கண்ணப்பனை நினைத்தால் காளத்தியானை நினைக்கிறோம்.

இந்தக் காளத்தியான் இருக்கும் கோயிலைத் தன்னகத்தடக்கிய ஊர்தான் இன்று காளாஸ்தி என்றும் காளஹஸ்தி என்றும் சீகாளத்தி என்றும் வழங்கும் காளத்தி, சீ, காளம், அத்தி (சிலந்தி, பாம்பு, யானை) மூன்றும் வழிபட்ட காரணத்தால் சீகாளத்தி என்று இத்தலம் பெயர் பெற்றது என்று ஸ்தல புராணம் கூறும்.

சிலந்தி தன் வாயால் நூல் இழைத்து, அந்நூலாலேயே இறைவனுக்குப் பந்தல் இடுகிறது. அப்பந்தல் தீபச் சுடரால் அழிந்தது கண்டு, அத் தீபத்திலேயே தானும் விழுந்து மடிந்து இறைவன் திருவடி அடைகிறது,

காளன் என்னும் பாம்போ தன்னிடமிருந்த அருமையான ரத்தினத்தை இறைவன் திருமுடியில் சாத்தி அலங்கரிக்கின்றது.

அத்தி என்னும் கணத் தலைவன் யானையாக அவதரித்து தன் துதிக்கையாலேயே நீர் முகந்து, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கின்றது.