பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வேங்கடம் முதல் குமரி வரை

தயாராய்க் கோபுர வாயிலை நோக்கியே நிற்கிறது,' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, எனக்கு.

இனி, கோயிலுக்குள்ளேயே நுழையலாம். அருள் ஞான சக்தி தரனின் அடி பணிவதற்கு மூன்னே, அர்ச்சகர் நம்மை அழைத்துச் செல்வது, ஆபத்சகாய விநாயகர் சந்நிதிக்குத்தான். உத்சவ மூர்த்தியும் சண்முகரும் இருக்கும் மண்டபத்திலே, கிழக்கு ஓரத்திலே, பெரிய உருவிலே இவர் இருக்கிறார்.

தணிகையில் வந்து தேவசேனையுடன் அமைதியாக் இருக்க விழைந்த இக் குமரன் வாழ்விலும் காதல் குறுக்கிட்டிருக்கிறது. பக்கத்திலே உள்ள குன்று ஒன்றிலே குறப் பெண்ணாக வளரும் வள்ளியை மணக்க விரும்புகிறார். அதற்காக என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்கிறார். கடைசியில் அந்தப் பொல்லாத வள்ளியை வழிக்குக் கொண்டு வர, அருமை அண்ணாவின் துணையை நாடுகிறார். அவரும் இவருக்கு அந்த ஆபத்தில் உதவுகிறார். அதனால் வள்ளிமலைக் குறத்தி வள்ளியைத் தட்டிக் கொண்டு வந்து விடுகிறார்.

இப்படி வள்ளியை மணம் புரியத் தக்க சமயத்தில் உதவிய அண்ணாவுக்குப் பூஜா நேரத்திலும் உத்சவ காலங்களிலும் அக்ர ஸ்தானமே கொடுத்து விடுகிறார். முருகன் மாத்திரம் என்ன, நாமும் ஆபத்சகாயரது சகாயத்தை எப்போதும் நாடுகிறவர் தாமே. நமக்கு வரும் மலை போன்ற ஆபத்துகளும் பனி போல் நீங்க வேண்டும் அல்லவா!

இனி கர்ப்பகிருஹத்துக்கே சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் அருள் ஞான சக்தி தரனைத் தரிசிக்கலாம். 'பொன்னிறக் காந்தளோடு' செங்குவளை மலர்களும், பொற்பமர் கடம்ப மலரும், பூந்தளிர் குறிஞ்சியும், சேத்த கூடதளமும் புனைந்த திரு மார்பு உடை அழகனாக அவன் அருகே நிற்கிறான்.

இங்குள்ள குமரன் ஆபத்சகாய விநாயகரைஸ்தாபித்த பின், குமரேசுவர் என்னும் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்கிறான்.