பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

39

அன்னையோ தன்னுடைய சக்தியை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, ஞானசக்தியை வேல் வடிவிலே அளிக்கிறாள் தன் மைந்தனுக்கு. சூரபத்மனை சம்ஹரிக்கத் தன் அன்னையிடம் வேல் பெற்ற முருகன், மக்களுக்கெல்லாம்ஞானாசிரியனாக இருந்து அருள் செய்ய மற்றொரு வேலைப் பெறுகிறான் தந்தையிடம். அதனால்தான் அருள் ஞான சக்தி தரன் என்ற திருப் பெயரும் தாங்குகிறான்.

இந்த மூர்த்தி இங்கு மயில் தெய்வயானை வள்ளியின்றித் தனித்தே இருக்கிறான், அமைதி நாடிய அண்ணல், அணங்குகள் இருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால், அமைதி பெறுவதேது? நல்ல அழகிய சுந்தர மூர்த்தியாக அவர் நிற்கிறார். தணிகையின் இணையிலியாக அவர் நிற்கும் அழகைக் காணத் துடித்த இராமலிங்க அடிகள் 'தணிகை மலையைச் சாரேனோ! சாமி அழகைப் பாரேனோ?' என்று ஏங்கியிருக்கிறார், தமது அருட்பாவில், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே நிற்கலாம் இந்த மூர்த்தியின் அழகை.

எப்போதும் அலங்காரம் செய்யப்பட்ட வண்ணமாகவே இருக்கும் மூர்த்தியை வணங்குவதை விட, அணிகளையும் பணிகளையும் களைந்து, அபிஷேகத்துக்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில் கண்டு தொழுவதே கலை அன்பர்கள் விரும்புவதொன்று. கோயில் நிர்வாகிகளைக் கலந்து, 'எப்போது வேண்டுமானாலும் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். இல்லை என்றால், கிருத்திகைதோறும் அபிஷேகம் நடக்கும் காலம் அறிந்து சென்று கண் குளிரத் தரிசிக்கலாம்.

அப்படி அபிஷேகம் நடக்கும்போது, கூர்ந்து கவனித்தால், அக்குமரனின் மார்பகத்திலே ஒரு குழி இருப்பதைக் காணலாம். அன்று தாரகாசுரனால் விடப்பட்ட சக்கரத்தைத் தன் மார்பிலே ஏந்தி, அதை அங்கேயே பதித்துக் கொண்டதாகவும், பின்பு இத் தணிகை மலையானைத் திருமால் பூசித்தபோது, தன்