பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மார்பகத்திலிருந்த சக்கரத்தை எடுத்துத் திருமாலுக்கு வழங்கி விட்டதாகவும், புராணம் கூறுகிறது. சக்கரம் பதிந்திருந்த இடந்தான் இன்று குழியாக இருக்கிறது. இம் மார்பகங் குழிந்த திருவடையாளத்தைக் கண்டு தொழுவார் இடர் ஒழித்து இன்ப வீடு அடைவர் என்பது பக்தர்களது நம்பிக்கை. அதனால் இந்த நம்பிக்கை உடையவர்கள் எல்லாம் சென்று தொழ வேண்டியது அபிஷேக காலத்திலேயே.

இந்தப் பெருமானை மும்மூர்த்திகளும் வழிபட்டனர் என்பர். அதனால் அருணகிரியார் திரிமூர்த்திகள் தம்பிரானே என்று பாடுவர். நாமும் இத் திரிமூர்த்திகள் தம்பிரானை வணங்கிய பின், அவனுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமுமாகத் தனிக் கோயில்களிலே இருக்கும் தெய்வயானை - வள்ளி இவர்களைக் கண்டு தொழலாம்.

தேவசேனையின் வலக்கரத்தில் நீலோற்பலமும் வள்ளியின் இடக்கரத்தில் தாமரையும் இருப்பதைத் தவிர, அந்த அம்பிகைகளின் சிலா வடிவங்களில் சிறப்பான அம்சம் ஒன்றும் இல்லை. இதோடு மலராலும் நகையாலும் அலங்கரிக்கப்பட்டு உருத்திராக்கத்தைக் கொண்டே விதானம் அமைக்கப்பட்ட விமானத்தில் வள்ளி தேவசேனா சமேதனாக நின்று கொண்டிருக்கும் உற்சவ மூர்த்தியையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

இக் கோயில் பழம் பெருமை வாய்ந்ததோடு, தமிழ், நாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டும் இருக்கிறது. ஆம்! தமிழைப் பொதிகைக்கு அளித்த பெருமையே இத்தணிகா சலத்துக்குத்தான். அன்று கைலையிலிருந்து தென்பொதிகை நோக்கி வந்த அகத்தியரை இடை நிறுத்தி இலக்கணம் கற்பித்து அனுப்பியவரே இத் தணிகைக்குமரன்தான். என்றுமுள தென் தமிழை அன்று முதல் இயம்பி இசை கொண்டவ'னாகத் தானே அகத்தியன் பொதிகை வந்து சேருகிறான்.