பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வேங்கடம் முதல் குமரி வரை

எதிர்நோக்கியவராய், தம்முடைய வீர உணர்ச்சியை யெல்லாம் அடக்கிக் கொண்டு, நரசிம்மனைப் போலவே யோக நிலையிலேதான் இருக்கிறார் இவர்.

யோக நரசிம்மனையாவது, மற்றும் சில தலங்களிலே கண்டு தொழலாம். யோக ஆஞ்சனேயரை இத்தலத்திலன்றி வேறு தலங்களில் காண முடியாது என்றே சொல்கிறார்கள்.

இவர் யோக மூர்த்தி மட்டும் அல்ல, அற்புதமான அஹிம்சா தர்மத்தை நிலை நிறுத்திய மூர்த்தியும் கூட. அன்று வட மதுரையை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்ற ஓர் அரசன் வேட்டை ஆடியிருக்கிறான். வேட்டையில் ஒரு பெண் மானைத் துரத்திக் கொண்டு, இந்த மலையை அடுத்த காட்டுக்கே வந்திருக்கிறான். மானின் மீது அம்பு தொடுக்க முனைந்தபோது, மான் இருந்த இடத்தில் ஒரு ஜோதி தோன்ற, அதைத் தொழுது வணங்கி, அன்று முதல் வேட்டையாடுவதையே நிறுத்தியிருக்கிறான்.

பின்னர் கும்போதரன் என்ற அரக்கனுடைய கொடுமையையும் ஒழித்து, இந்தப் பிரதேச மக்களையே காப்பாற்றி யிருக்கிறான். நரசிம்மனது; ஆணையின்படியே, ஆஞ்சநேயர் தான் ஜோதியாகத் தோன்றி, வட மதுரை மன்னனைச் சிறந்த அஹிம்சா வாதியாக ஆக்கியிருக்கிறார். இந்தச் சேவையை மெச்சியே, இவருக்குச் சங்கு, சக்கரமும் சதுர்ப்புஜமும் அருளி, இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கச் செய்திருக்கிறான், நரசிம்மன்.

இதனாலெல்லாம் இந்த யோக ஆஞ்சநேயர் பிரசித்தி யடையவில்லை. மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவனாக அமைந்துதான் தக்க புகழை இன்று தமக்குத் தேடிக் கொண்டிருக்கிறார். மக்களின், அதிலும் பெண்களின் தீராத உடல் நோயை மாத்திரம் அன்றி, மன நோயையுமே தீர்த்து வைக்கிறார் இவர்.