பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது.

தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு அழகான மூர்த்தங்கள்; சிற்பச் செல்வங்கள். அவற்றை எல்லாம் காணக் காண என் நெஞ்சு நிறைந்தது ; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைந்தது.

இந்த நிலையில்தான் தஞ்சையில் கலைக்கூடம் உருவாக்கும் பணியை ஏற்றேன். கலை தேடி அலைந்த காதல் விரிக்கில் பெருகும். தமிழ் நாட்டின் சிற்ப வடிவங்களின் சிறப்பை உணர்ந்தபோது, அவைகளைப்பற்றி முதலில் தமிழர்களுக்கும், பின்னர் உலக மக்களுக்குமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்னும் ஆர்வம் பிறந்தது.

இந்த ஆர்வமே கலையைப் பற்றி, கலை வளர்க்கும் நிலையங்களான தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதத் தூண்டியது.

நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும், நண்பர் திரு. சதாசிவம், தொடர்ச்சியாகக் 'கல்கி'யில் இலக்கியக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று விரும்பினார். நானும், 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடரில் நூற்று எட்டுக் கோயில்களைப் பற்றி எழுதுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

சென்ற ஒன்பது மாதங்களாகக் கட்டுரைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் அன்பர்கள், அதிலும் முக்கியமாகப் பெண்கள் மிக்க ஆர்வத்தோடு படிக்கிறார்கள் என்று அறிகிறேன்.