பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வேங்கடம் முதல் குமரி வரை

திருச்செந்தூரில் முருகன் நிகழ்த்தியது சூரசம்ஹாரம். அதற்குப் பரிசாகத் தேவேந்திரனிடம், அவன் மகள் தேவ சேனையை மனைவியாகப் பெற்றது திருப்பரங்குன்றத்திலே. மேலும், வள்ளியைக் கண்டு மையல் கொண்டு, அவள் தந்தை தமையன் முதலியோரைக் கண்டு ஓடி ஒளிந்தவன் முருகனே தவிர, முருகனைக் கண்டு வள்ளி ஒளிந்ததாகப் புராணக் கதை ஒன்றும் இல்லை. ஆதலால் 'மலைமேவு மாயக் குறமாதான' வள்ளியைத் திருநெல்வேலி ஜில்லா போசிகள், தங்கள் நாட்டுக்காரி அவள் என்று உறவு கொண்டாட முடியாதுதான்.

ஆதலால் 'முற்றாப் பசுங்கதிர் செவ்வேனல் காத்த அந்த நீல வள்ளி' அவள் பெயராலே வழங்குகின்ற வள்ளிமலையைச் சேர்ந்தவளாகத்தான் இருத்தல் வேண்டும். தெய்வ மகளான தேவசேனையை மணந்த பின், தணிகை சென்று அமைதியாகக் குடும்பம் நத்த விரும்பிய அந்த அருள் ஞான சக்திதரனிடம் ஒரு காதற் கலகத்தையே ஆரம்பித்து வைக்கிறார், நாரதர். 'தேனென்று பாகென்று உவமிக் கொணாத் தெய்வ வள்ளி' அவள் என்று ஆசையையே மூட்டுகிறார். அதோடு அவள் தணிகைக்கு அணித்தே உள்ள மலையில் வாழ்பவள் என்றும் சொல்கிறார்.

அவ்வளவு தான், புறப்பட்டு விடுகிறான் முருகன், கால் கடுக்க நடந்தே செல்கிறான். வேடுவப் பெண்ணை மணக்க விரும்பிய குமரன் வேடனாகவே வேஷம் போடுகிறான். வேட்டையாடி வந்த மானைத் தேடி வரும் வில்லனாக (வில்லை ஏந்தியவனாக) தினைப்புனம் காக்கும் வள்ளியை அணுகுகிறான். அவளிடம் காதல் மொழி பேசுகிறான்.

அவள் கோபித்துத் தந்தையையும் தமையன்மாரையும் அழைத்தபோது, அங்கேயே வேங்கை மரமாக நிற்கிறான். பின்னர், அவளது தந்தையாம் நம்பிராஜனையே கைக்குள் போட்டு, விருத்தனாக மாறி, கள்ளச் சிறுமியாம் வள்ளியை வேட்கிறான். அதுவும் பலன் தராதது கண்டு, தன் சகோதரன்