பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேங்கடம் முதல் குமரி வரை

கேட்பது எனது காதில் விழத்தான் செய்கிறது. அந்த வள்ளியை நல்ல கல்லுருவிலே காண மலை ஏறத்தான் வேண்டும். முந்நூறுக்கு மேற்பட்ட படிகள் அழகாகக் கட்டப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு இடத்தில்தான் செங்குத்தான படிக்கட்டுகள். மற்றவை எல்லாம் ஏறுவதற்கு வசதியாகவே இருக்கும்.

படிக்கட்டுகளில் கட்டியிருக்கும் மண்டபங்களில் எல்லாம் தங்கி இளைப்பாறி, மலை முகட்டுக்கு வந்தால், கோயிலின் முன்வாயிலுக்கு வருவோம். கற்பூரக் கொப்பரை, துவஜ ஸ்தம்பம் முதலியவற்றோடு, குடை வரையாக அமைந்திருக்கும் கோயிலையுமே வலம் வரலாம். அப்படி வலம் வந்தால் திரும்பவும் கோயிலின் முகப்பிலே கல்லால் கட்டியிருக்கும் மண்டபத்துக்கே வருவோம். இந்த மண்டபம் கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டியது. மற்றைய பகுதி மலையைக் குடைந்து அமைத்த குடைவரைக் கோயிலே.

முன் மண்டபத்தைக் கடப்பதற் குள்ளே இடப் பக்கம் திரும்பினால் கற்பாறையிலே ஒரு பெரிய குகை. அந்தக் குகைக்குள்ளே நிற்கிறாள் வள்ளி, கவண் வீசும் கயிற்றை ஏந்தி ஆலோலம் பாடும் நிலையில் அவளை உருவாக்கியிருக்கிறான் சிற்பி, அர்த்த சித்திரமாக (Bas relief). ஆம்! இந்த இடமேவள்ளி பிறந்த இடமாக இருக்க வேண்டும். இங்குதான் அவள் தினைப்புனம் காத்து நின்றிருக்க வேண்டும் என்பதில் இனிச் சந்தேகம் எழுவதற்கு நியாயமில்லை.

இனி, குடைவரைக் கோயிலுக்குள் நுழையலாம். அது மூன்று கட்டுகளாக இருக்கும். முதற்கட்டில் ஒரே இருட்டு, அந்தக் கட்டின் பாறைகளில் முட்டாமல், வலப்புறம் உள்ள வாயில் வழி நுழைந்தால், அதை விட உயரமான அடுத்த கட்டில் நுழையலாம். இங்கு நல்ல வெளிச்சம் வரக் கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கு எல்லோரும்