பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. பாலாற்றில் பள்ளி கொண்டான்

ஒரு சிறு சம்பவம், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில், அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. அது ஒரு பெரிய உண்மையையே விளக்குகிறது. விவேகானந்தர் என்னும் நரேந்திரன் பத்துப் பன்னிரண்டு வயதில் ஒரு சிறு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பூகோளப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நரேந்திரன் அப்போது கண்களை மூடித் தியானத்தில் இருப்பவன் போல் இருந்தான். இதை ஆசிரியர் பார்த்து விட்டார். 'அடே.! பாடம் நடக்கும் போது தூங்கவா செய்கிறாய்?' என்று சொல்லிப் பையன் நரேந்திரனைக் கோபித்துப் பிரம்பால் இரண்டு அடியும் கொடுத்து விட்டார்.

பாடம் முடியும் தறுவாயில் ஆசிரியர் பையன்களிடம் கேள்விகள் கேட்டார். விழித்த கண் விழித்தபடியே இருந்து பாடங் கேட்ட பையன்கள் எல்லாம் கேள்விக்கு விடை சொல்ல இயலாமல் திரு திரு என்று விழித்தார்கள். நரேந்திரனிடம் கேள்விகள் கேட்டபோது, அவன் ஒவ்வொரு கேள்விக்கும் டக் டக் என்று பதில் சொன்னான்.

'ஐயோ! இந்தப் பையன் பாடம் கேட்கும் போது தூங்குகிறான் என்று அடித்து விட்டோமே!' என்று வருந்தினார், ஆசிரியர். அவருக்கும் அன்று ஒரு பெரிய உண்மை விளங்கிற்று. மனத்தை ஒரு நிலைப்படுத்திப் பிறர் சொல்லும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளக் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. கண்களை மூடி, அறிவைச் செலுத்திக் கூர்மையாக விஷயங்களைக் கிரஹித்தல் வேண்டும் என்று அறிந்தார்.