பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

67

மாமியான லக்ஷ்மிக்கும், கல்வி நிரம்பிய மருமகளான சரஸ்வதிக்கும் ஒரு விவாதம். தங்களில் யார் பெரியவர் என்று. இந்தப் பிரச்னைக்கு முடிவு காணும் பொறுப்பு பாவம், அந்த அப்பாவி பிரமன் தலையில் விழுந்திருக்கிறது.

அவர் எவ்வளவுதான் மனைவிக்கு அடங்கி நடப்பவர் என்றாலும், உண்மையை ஒளிக்கவில்லை. இந்த நில உலகில், கல்வியை லிடச் செல்லத்துக்குத்தானே மதிப்பு. ஆதலால் லக்ஷ்மியே பெரியவள் என்று தீர்ப்புக் கூறுகிறார். கோபம் பிறக்கிறது. சரஸ்வதிக்கு. புருஷனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கே வந்து விடுகிறாள். சஹய பர்வதத்தில் வசிக்கிறாள்.

பிரம்மாவுக்கோ தனிமை. சத்யவிரத க்ஷேத்திரத்தில் ஓர் அசுவமேத யாகம் செய்ய முனைகிறார். சரஸ்வதி அந்த யாகத்தை அழிக்க விரைகிறாள். நதி உருவில் பெருக்கெடுத்து யாகசாலைக்குள் புக எண்ணுகிறாள்.

பிரம்மா தம் தந்தை மகா விஷ்ணுவிடம் சரண் அடைகிறார். முன்னமேயே அம்பரீஷ முனிவர் தவத்துக்கு இரங்கிப் பூலோகத்தில் அவருக்குக் காட்சி தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆகவே, முனிவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும், பிரமனது வேண்டு கோளைப் பூர்த்தி பண்ணவும், விரைந்து இப்பூமிக்கு இறங்கி, பெருக்கெடுத்து வரும் ஆற்றுக்குக் குறுக்கே சங்கு சக்ரதாரியாய், ஆதிசே சயனனாகத் தெற்கே தலையும் வடக்கே காலுமாகப் பள்ளிகொண்டு விடுகிறார், பாலாறாய்ப் பெருகி வந்த சரஸ்வதியை மேற்கொண்டு போக விடாமல் தடுத்து விடுகிறார். அம்பரீஷருக்கும் சேவை சாதிக்கிறார். கல்வியறிவால் ஏற்படும் அகங்காரத்திற்கு அணை போட்டு, அறிவை வளரச் செய்யும் பெருமாளாக, இப்பள்ளி கொண்டான் உத்தர ரங்கத்திலே பள்ளி கொள்கிறார்.