பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வெற்றிடமாய் இருக்கும்) கர்ப்ப கிருஹத்தை எல்லாம் பார்க்கலாம்.

கர்ப்ப கிருஹத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்திலே ஒரு சுரங்கப் பாதை. அந்தப் பாதை விரிஞ்சிபுரம் வரை செல்கிறது என்று சொல்வார்கள் மக்கள். ஆனால், அப்படிச் சென்று பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. அதைப் பற்றி நாமும் அதிக அக்கறை காட்ட வேண்டியதில்லை.

தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளில் எல்லாம் மிகவும் அழகுடையது வேலூர்க் கோட்டைதான். செஞ்சிக் கோட்டை அளவிலும், உறுதியிலும் உயர்ந்ததுதான். ஆனால் இக்கோட்டையில் உள்ள அழகு அங்கு இல்லை. கோட்டை சதுர வடிவமானது. கோட்டை மதிலில் இரண்டு அடுக்குகள். கீழ்த்தளத்தில் அர்த்தசந்திர வளைவுகள். கோட்டைச் சுவரின் மேல் தளத்திலே ஒரு கார் செல்லக் கூடிய அளவுக்கு விதி. கோட்டையைச் சுற்றி அகழி.

கோட்டைக்குள்ளே வட ஆர்க்காடு மாவட்டத் தலைமைக் காரியாலயங்கள். அங்கேயே போலீசார் பயிற்சிப் பள்ளி. இவைகளைத் தவிர, கோட்டைக்குள்ளேயே ஒரு மசூதி, ஒரு கிறிஸ்தவக் கோயில் எல்லாம், எம்மதமும் சம்மதம் என்ற சமரச சன்மார்க்கத்தையே அல்லவா பறை சாற்றுகிறது. இக் கோட்டை.

கோட்டையைப் பார்ப்பதற்காகவே வேலூருக்குப் போகலாம் ஒரு நடை. அங்கு நடந்த சிப்பாய்க் கலகம்-வேலூர்ப் புரட்சி இயக்கம் இவைகளையும் தெரிந்து கொள்ளலாம், கோட்டைக்குள் சென்றால், கோட்டை மீது வானளாவிப் பறக்கும் நாட்டுக் கொடிக்கும் வணக்கம் செலுத்தி விட்டுத் திரும்பலாம்.