பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

93

மிகுந்திருப்பதையே காண்கின்றார். தென்திசையிலிருந்து வந்த ஞானசம்பந்தர், சேயாற்றின் தென்கரையில் இருந்தே, திருவோத்தூர் வேதபுரி நாயகன் கோபுரத்தையும் மதிலையும் தரிசித்து, அந்தக் கரையிலுள்ள திருமடத்தில் தங்குகிறார்.

மதுரையில் ஞானசம்பந்தர் நிகழ்த்தியவைகளைக் கேட்டிருந்த சேயாற்றுச் சமணர்கள், ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த கொடிய பாம்பொன்றை அவர் மீது ஏவுகின்றார்கள். அவரோ பாம்பைச் சமணர்களது 'வேந்தன் வாழ் இஞ்சி சூழ் திருமனைக்கே ஏகென்று உத்தரவு இடுகிறார். அதனால் துயருற்ற அரசன் வந்து, அடிவணங்க, ஞானசம்பந்தர்,

தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார்வினை
ஓட்டீரே! உம்மை ஏத்தும் ஒத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே!

என்று இறைவனை வேண்டுகிறார்.

இறைவனும் மகுடி ஏந்திப் பாம்பாட்டியாக வந்து, அதைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் சென்று மறைகிறார்.

இதனால் சமணர் பகை வளர, அரசன் விரும்பியபடி புனல் வாதத்திற்கே ஒத்துக் கொள்கிறார். சமணர்கள் எழுதியிட்ட ஓலையைச் சேயாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது. ஆனால் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் ஒரு பாட்டை ஏட்டில் எழுதி, ஆற்றில் இட, அது புது நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறி ஒரு பழம்பதியை அடைகிறது. இவ்வாறு ஏடு எதிர் சென்று நின்று தங்கின இடமே அன்று முதல் சேயாற்றில் வென்றான் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. சேயாற்றில் வென்றவன் வேதபுரி நாயகனும், அவன் புகழ் பாடும் நற்றமிழ் வல்ல ஞான