பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

87

நம் நாட்டு வள்ளுவர் இவ்வளவு மோசமில்லை. வையத்தில் வாழ்வாங்கு வாழும் வகைகளை எல்லாம் வகுத்துக் கூறுகிறார். அதன்பின் அவர் தேடுகிறார் ஒரு சான்றோனை. சான்றோனைத் தேடும் முயற்சியில் அவர் சொல்கிறார் :

சமன் செய்து சீர் தூக்கும்
கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

என்று. சரிபார்த்து, நிறுத்தி, அளக்கின்ற துலாக்கோலைப் போல் இருந்து, தம்மிடம் தீர்ப்புக்கு வந்திருக்கும் வழக்கில் ஒரு பக்கமாகச் சாய்ந்து விடாமல் நடுநிலைமை வகிப்பவர்களே சான்றோர் என்று கூறுகிறார். இப்படி வழக்கைச் சீர்தூக்கி நேர்மையான தீர்ப்புச் சொல்ல உள்ளம் எவ்வளவு நேராக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களை இவ்வுலகில் விரல்விட்டு எண்ணி விடலாம்தானே.

அத்தகைய சான்றோர் வரிசையிலே முதலிடம் பெறுபவனே மனுநீதிச் சோழன், அவன் வரலாறு சரித்திரத்தில் மாத்திரம் அல்ல; திருத்தொண்டர் பெரிய புராணத்திலேயே இடம் பெற்று விடுகிறது. அவன் சரித்திரம் இது தான். சரித்திர காலத்துக்கும் முந்திய சோழ பரம்பரையிலே ஒரு சோழ மன்னன் மனுநீதிச் சோழன் என்ற பெயரோடு திருவாரூரிலே இருந்து அரசு செய்கிறான், அவனுக்கு அருமையாக ஒரே மகன்; அந்த அரசிளங்குமரனுக்கு என்று தனித் தேர்; அந்தத் தேரில் ஏறிக்கொண்டே அந்த நகரின் மணிமாட வீதிகளிலே அவன் வலம் வருவான்.

ஒருநாள் அவன் தேர் ஊர்ந்து வரும்போது ஓர் இளங்கன்று துள்ளி வந்தது; தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு நசுங்கி உயிர் இழக்கிறது. மன்னன் மகன் இதற்காக வருந்துகிறான். செய்வது இன்னதென்று அறியாது மயங்குகிறான். இதற்குள் கன்றை இழந்த தாய்ப் பசு