பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வேங்கடம் முதல் குமரி வரை

பேரும் நள்ளாறு, நாகைக்காரோணம், தாறாயில், கோளிலி, வாய்மூர், மறைக்காடு என்னும் தலங்கள் சென்று தங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் இந்தத் தியாகேசர், 'நிறை செல்வத் திருவாரூருக்கு' வந்து செலவத் தியாகேசர் என்ற பெயரிலேயே நிலைத்திருக்கிறார். இந்தத் தலத்திலேயே சிறந்த சந்நிதி இதுவே. இரத்தின சிம்மாசனத்திலே முன்னே இரண்டு வாள் படையும், நடுவில் ஒரு பூச்செண்டும் பொருந்த எழுந்தருளியிருக்கிறார். பெருமான் பக்கத்திலே அம்மை. இருவருக்கும் இடையில் உள்ள கந்தர் மலர்மாலைகளுக்குள்ளும், ஆடை அணிகளுக்குள்ளும் புதைந்து வெளியில் தெரியாமலேயே நிற்கிறார்.

'வெள்ளிலை வேல் நம்பியொடும் ஆடரவர் கிண்கிணிக் கால் ஐயன் இருந்து அரசு செய்கிறான்' என்று தியாகராஜ லீலை கூறும். இந்தத் தியாகராஜர் அணியும்பணிகளுக்கு எல்லாம் தனித் தனிப் பெயர். தியாகர் அணியும் பரிவட்டம் தியாக விநோதன், அணியும் கிண்கிணி ஆடரவக் கிண்கிணி, வாள் வீர கண்டயம், தேர் ஆழித் தேர், மாலை பணி, மத்தளம் சுத்த மத்தளம், நாதசுரம் பாரி, வாத்தியம், பஞ்சமுக வாத்தியம், பிள்ளைத் தண்டு, மாணிக்கத் தண்டு, நடனம் அசபை, கொடி தியாகசபை. இவரது தேவ சபையில் நடக்கும் திருவந்திக் காப்பு சிறப்பானது.

அர்ச்சகர் நீண்ட அங்கி தலைப் பாகை எல்லாம் தரித்து எதிரே நின்று தான பூசனை புரிவார். தேவேந்திரனே வந்து பூஜை செய்வதாக ஐதீகம். இவ்வளவு பெருமையோடு விளங்கும் தியாகருக்கு, வீதிவிடங்கன், தியாக விநோதர், செவ்வந்தித் தோட்டழகர், செங்கழுநீர்த் தாமர், அஜபா நடேசர் என்றெல்லாம் நூற்றெட்டுத் திருநாமங்கள். இவரைத் தரிசிக்க வேண்டுமானால் மாலை ஆறு, ஆறரை மணிக்கே செல்ல வேண்டும். நீண்ட நேரம் இருந்தே பூசனையில் கலந்து கொள்ளவும் வேண்டும்.