பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

95

விட, பின்னர் ஒற்றியூரிலே சங்கிலியாரை மணந்த தன் காரணமாகப் பரவை ஊட, அந்த ஊடல் தீர்க்க இறைவனையே தூதாக அனுப்புகிறார். இந்தக் கதையை எல்லாம் அறிந்த ஒரு புலவர், 'ஐயோ! ஐயனின் அடியும் முடியும் காண இந்த அரியும் அயனும் அன்று அண்ணாமலையில் திணறி இருக்கிறார்களே. இவர்கள் இருவரும் இந்தப் 'பரவையார் வீட்டு வாயில் படியில் வந்து இருந்து கொண்டால்,” ஐயனின் அடியையும் முடியையும் அவன் தூது வரும்போது எவ்வளவு எளிதாகக் கண்டு விடலாம்' என்கிறார்.

ஆனார் இலையே அயனும் திருமாலும்?
காணா அடிமுடிமுன் காண்பதற்கு - மேனாள்
இரவு திருவாரூரில் எந்தைபிரான் சென்ற
பரவை திருவாயில் படி

என்பது பாட்டு. சுவையான அனுபவம்தான். இந்தப் பரவைக்கும் சுந்தரருக்கும் தெற்குக் கோபுர வாயில் பக்கம் ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இந்தத் தலத்தில் சுந்தரர் நிரந்தரமாக இருந்திருக்கிறார் என்றால் சம்பந்தர், அப்பர், மணிவாசகர் எல்லாம் வந்து வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார்கள். எல்லோரும் நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

பொன்னும் மெய்ப்பொருளும்
தருவானை, போகமும் திருவும்
புணர்ப்பானைப்

பின்னை என்பிழையைப்
பொறுப்பானை, பிழை எலாம்
தவிரப் பணிப்பானை,

இன்ன தன்மையன் என்று
அறி ஒண்ணா எம்மானை
எளிவந்த பிரானை,