பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வேங்கடம் முதல் குமரி வரை

இருக்கும். இறைவனைப் பாடிய இவர் மனிதனைப் பாடியதில்லை . இந்த தீக்ஷிதர் ஒருநாள் கீழ் வேளூருக்கு வருகிறார். அங்குள்ள அக்ஷயலிங்கரைத் தரிசிக்க விரும்புகிறார். இவர் தம் அனுஷ்டானங்களையெல்லாம் முடித்துக் கொண்டு கோயிலுக்கு வருவதற்கு முன் அர்ச்சகர் கோயில் வாயிலைப் பூட்டிக்கொண்டு போய் விடுகிறார். இவருக்கோ இவைனைத் தரிசிக்க ஆசை. அடைத்த வாசல் முன்பு நின்றே,

அக்ஷயலிங்க விபோ,
ஸ்வாயம் போ,
அகிலாண்ட கோடியிரபோ!
பாஹி சம்போ!
அக்ஷயலிங்க விபோ

என்னும் அழகிய கீர்த்தனத்தைச் சங்கரனுக்குப் பிரியமான சங்கராபரண ராகத்தில் பாடுகிறார். பக்திப் பரவசமாக இவர் நின்று பாடுவதைக் கேட்ட அக்ஷயலிங்கருக்கே இவரைப் பார்க்கும் ஆவல் மேலிட்டிருக்கிறது. உடனே அவர் கதவைத் திறந்திருக்கிறார். இது நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே. முத்து சாமி தீக்ஷிதர் காலம் 1775 முதல் 1853 வரை என்பது பிரசித்தம்.

இப்படி மூடிய கதவைத் திறக்க ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்பு அப்பர் அந்தத் திருமறைக் காட்டிலே பாடினார் என்பது வரலாறு. அங்கு அப்பர் தேவாரம் பாடி, மூடிய கதவைத் திறக்கிறார். இந்தத் தீக்ஷிதரோ நல்ல கீர்த்தனம் ஒன்றைப் பாடி கோயில் கதவைத் திறந்திருக்கிறார். பக்தி வலையில் படுபவன் தானே பரமன். பக்தர்கள் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் செய்யாத காரியம் என்று ஒன்று உண்டா ? இப்படி முத்துச்சாமி தீக்ஷிதருக்காக மூடிய கதவைத் திறந்தவர் அக்ஷயலிங்கர். அந்த அக்ஷயலிங்கர் கோயில் கொண்டிருக்கும் தலம் கீழ் வேளூர். அந்தக் கீழ் வேளூர் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.