பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேங்கடம் முதல் குமரி வரை

பண்டிதன் ஆகிறான். அவன் தன் தந்தை செய்து வந்த பூசைமுறை மான்யங்களைக் கேட்கிறான். தாயாதிகளோ அவன் இறந்து போன ஆதி சைவக் குருக்களுக்குப் பிறந்தவன் இல்லை என்று கூறி, அவரது மனைவியின் கற்புக்கே இழுக்குக் கற்பிக்கிறார்கள். அந்த அம்மையோ அக்ஷய லிங்கரின் சந்நிதிக்கு வந்த குறை இரந்து நிற்கிறாள். பெண்ணின் கற்பைக் காக்க, இறைவன் கையிலிருந்த மழு புறப்பட்டுக் கரகர என்று சுழன்று வருகிறது. அது வரும் வேகத்தைக் கண்டு, நந்தியும் பயந்து விலகிக் கொள்கிறது. பெண்ணின் கற்புக்குப் பழுது. கூறிய தாயாதிகள் தலைகளை வெட்டித் தரை மட்டமாக்கி விடுகிறது மழு. இப்படி மழு எறிந்து கண்டித்து அப்பெண்ணின் கற்பைக் காத்த பெருமானாக அக்ஷயலிங்கர் அமைகிறார். அந்த அவசரத்தில் விலகிய நந்தி அப்படியே இருக்கிறது.

இந்த நந்திக்கு வலப் பக்கமாக நடந்து பின்னர் படிக்கட்டு ஏறித்தான் அக்ஷயலிங்கர் சந்நிதிக்கு வந்து சேர வேணும். படிக்கட்டு ஏறுமுன் இத்தலத்துக்கே விசேஷமான பாலசுப்பிரமணியரைத் தரிசித்து விட வேண்டும். சூரபத்மனை சம்ஹரித்த வெற்றி வேலாயுதனை வீர ஹத்திகள் சூழ்ந்து கொள்கின்றன. இந்த ஹத்திகள் நீங்க இறைவன் கட்டளை இட்டபடியே, பதரி வனமாகிய இந்தத் தலத்துக்கு வந்து நவலிங்க பூசையும் துவாரலிங்க பூசையும் செய்து தவம் இருக்கிறான், அந்த பாலசுப்பிரமணியம்.

மஞ்சளால் பிடித்து வைத்த பிள்ளையார் இருக்கும் இடமே மஞ்சாடி: அவர் பிரதிஷ்டை பண்ணிய நவலிங்கங்களே, கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பா வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், தேவூர் முதலிய இடங்களில் இருக்கின்றன என்று கூறும் தலவரலாறு, இந்தப் பூசையைச் செய்ய ஒட்டாமல் வீரஹத்திகள் இடையூறு செய்ய, அன்னை பராசக்தி கோர ரூபம் எடுத்து வந்து மைந்தனைக் காக்க