பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முனைகிறாள். நான்கு திசைகளிலும் ஆகாயத்திலும் பரவி நின்று காத்த அம்மையையே கோயிலின் வட பக்கத்தில் அஞ்சு வட்டத்தம்மை என்ற பெயரில் காளி வடிவில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். குமரன் தவம் நிறைவேறுகிறது. வீரஹத்திகள் ஓடுகின்றன. அந்தத் தவக் கோலத்திலேயே பாலசுப்பிரமணியம். இந்தப் பாலசுப்பிரமணியரை வணங்கிவிட்டே படியேறி மேலே போகவேணும். அப்படிப் போனாலும் நம் எதிரே காட்சி கொடுப்பவர் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உள்ள அக்ஷயலிங்கரே. அதன்பின் வடக்கே திரும்பினால் தெற்கு நோக்கிய கோலத்தில் சபாபதி தரிசனம் தருவார்.

இந்தச் சபாபதி மற்றக் கோயில்களில் உள்ள சபாபதியைப் போல் இல்லையே என்று தோன்றும் நமக்கு. உண்மைதான். விரித்த செஞ்சடையுடன் முயலகன் மீது நடனமாடும் நிலையில் இருப்பதால் அவர் நடராஜர்தான் என்பதைத் தெரிவோம். ஆனால் சாதாரணமாக உள்ள நான்கு திருக்கரங்களுக்குப் பதிலாகப் பத்துக் கரங்கள். வலது காலை ஊன்றி இடது பாதத்தைத் தூக்கி ஆடுவதற்குப் பதிலாக, இடது காலை ஊன்றி வலது காலை ஏதோ வேணுகோபாலன் கால் வைத்து நிற்பது போல் இடப்பக்கம் வைத்து நிற்கிறாரே இவர் என்றும் எண்ணுவோம். அதற்குள் அர்ச்சகர் இடைபுகுந்து. 'ஆம்! இவர்தான் வலது பாத நடராஜர்' என்பார்.

இன்னும் இச் சந்நிதியிலே சிவகாமி அம்மையுடன், சின்னஞ் சிறிய வடிவில் அகஸ்தியர் இருப்பார். தாளம் போட்டுக் கொண்டு பிரமனும், மத்தளம் கொட்டிக் கொண்டு திருமாலும் நிற்பர். மேலும் லக்ஷ்மி கரதாளம் போட, சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். ஒரே இசை முழக்கம் இந்த நடன அரங்கிலே. இப்படி ஒரு நடனம் எந்தச் சந்தர்ப்பத்திலே என்று தெரியத் தல புராணத்தையே ஒரு புரட்டுப் புரட்ட வேண்டும். தல புராணம் கூறும்வரலாறு

வே.மு.கு.வ - 8