பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

குதிரை வாங்கப்போன இடத்தில் இவரை வந்து இறைவன் அல்லவா சிக்கெனப் பிடித்திருக்கிறான்; இவர் போய் அவனைப் பிடித்ததாக இல்லையே' என்று நினைப்பேன். இந்த இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளில்தான் எத்தனை எத்தனைவகை. இதில் குரங்குப் பிடியும் பூனைப்பிடியும் அல்லவா இருக்கின்றன. நமக்குத் தெரியுமே குரங்கு தன் குட்டியைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாது. குட்டிதான் தாயை விடாப் பிடியாகக் கட்டிப் பிடித்திருக்கும் போது தாய்க் குரங்கு மரத்துக்கு மரம் தாவும். மதில் சுவரில் ஏறும். அத்தனை நேரமும் விடாது பற்றிக் கொள்ளும் குட்டி.

பூனை இருக்கிறதே, தன் குட்டிகளிடம் மிகுந்த பாசம் உடையது. எங்கு சென்றாலும் தன் குட்டியைத்தானே தூக்கிச் செல்லும். அதிலும் குட்டியின் முதுகில் வாயை வைத்துக் கொஞ்சமும் நோவாமல் கடித்து எடுத்துச் செல்லும். எத்தனை குட்டிகள் இருந்தாலும் அத்தனை குட்டிகளையும் அப்படி ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றே காப்பாற்றும்.

இப்படித்தான் இறைவன் நம்மிடம் நடந்து கொள்கிறான். குரங்குக் குட்டியைப் போல் நாம் அவனை விடாது பற்றிக் கொண்டிருக்க வேணும். அப்போதுதான் சிலருக்கு அவன் அருள் பாலிப்பான். இன்னும் சிலருக்கோ அவன் பூனையைப் போல் பரிவுகாட்டி. அவனே வந்து அணைத்து எடுத்துத் தன்னுடன் சேர்த்து அருள்பாலிப்பான். இந்த உறவு முறையையே மார்க்கட. நியாயம், மார்ஜால நியாயம் எனச் சொல்லுவர் சமயவாதிகள். இரண்டு முறைகளிலும் பிடிப்பு உண்டு, ஒன்று அவனை நாம் பிடிக்க வேண்டும். இல்லை. அவன் நம்மைப்பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிடியும் ஏதோ 'ஏனோ தானோ' என்று இராமல் சிக்கெனப் பிடித்த பிடியாய் இருத்தல் வேண்டும்.

மாணிக்கவாசகரை அப்படிப் பிடித்தவன் இறைவன். இவருமே அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்,