பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வேங்கடம் முதல் குமரி வரை

இந்தச் சிங்காரவேலர் அழகான திரு உரு மூன்றடி உயரமே உடையவர் என்றாலும் நல்ல கம்பீரக் கோலத்துடன் நிற்கிறார். இவர் முழு அழகையும் காண, கார்த்திகை தினம்தான் செல்ல வேண்டும். அபிஷேக காலத்தில் தான் காண வேண்டும். அப்போதும் ஓர் எமாற்றம் இருக்கும் நமக்கு. சிங்கார வேலவரை வடித்த சிற்பியா இந்த வள்ளி தேவயானையையும் வடித்தான் என்று எண்ணத் தோன்றும். அந்த உருவங்களில் அத்தனை வடிவ அழகு இராது. வினாவினால் ‘ஒரிஜினல்' வள்ளி தேவயானையர் களவு போய் 'டூப்ளிகேட்' வள்ளி தேவயானையரையே பின்னர் செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். ஐயோ! அழகனான சிங்காரவேலவனுக்கு அழகு மனைவியர் இல்லையே! அது அவன் ஜாதக விசேஷம். நாம் என்ன செய்ய?

இந்தச் சிங்காரவேலவனைத் தரிசித்துவிட்டுக்கட்டு மலையைவிட்டு இறங்கிக் கீழ்தளத்தில் கோயில் கொண்டிருக்கும் வேல் நெடுங்கண்ணி அம்மையைத் தரிசிக்கலாம். அம்மையின் திருஉரு அழகான ஒன்றுதான். அவளது அழகைவிட அவளது கருணையே சிறப்பானது. அன்று சூரபதுமனை முடிக்கக் கார்த்திகேயன் கிளம்பியிருக்கிறான். அவனிடம் அப்போது பல படைகள் இருந்தாலும், முக்கியமான வேல் இருக்கவில்லை. இதை உணர்ந்திருக்கிறாள் அன்னை வேல் நெடுங்கண்ணி. அதனால் ஓடோடி வந்து தன் மகனாம் முருகனக்கு வேல் ஒன்றைக் கொடுத்திருக்கிறாள். அந்த வேல்தானே சூரனைச் சம்ஹரித்திருக்கிறது. இப்படி முருகன் வேல் வாங்கி வேலனாக நின்ற இடம்தான் சிக்கல் என்று கூறும் தல புராணம். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது பழமொழியாச்சே. இந்த வேல் வாங்கும் விழா கந்த சஷ்டிக்கு முந்திய நாள் நடைபெறும், கந்தன் விரைவாக வருவதும் அம்மாவிடம் வேல் வாங்குவதும் அழகான காட்சி. ஆனால் அதை விடச் சிறப்பானது, அந்த நேரத்தில் சிங்கார வேலவர் முகத்தில்