பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வேங்கடம் முதல் குமரி வரை

இறைவனே காரோணர் ஆகிறார். இப்படித் தான் கடல் நாகைக் காரோணம் உருப்பெற்றது என்பது புராணக் கதை. இப்படிச் சரித்திரப் பிரசித்தியும் புராணப் பிரசித்தியும் பெற்ற கடல் நாகைக் காரோணர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

நாகப்பட்டினம் தஞ்சை ஜில்லாவில் தஞ்சைக்கு நேர் கிழக்கே 55 மைல் தூரத்தில் உள்ள ஒரு கடற்கரைப் பட்டினம் தஞ்சை திருவாரூர் வழியாகவோ, இல்லை மாயூரம் திருவாரூர் வழியாகவோ ரயிலிலும் போகலாம்; காரிலும் போகலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரைமைல் தொலைவில் கோயில் இருக்கிறது. அங்குள்ள வண்டிக்காரர்களிடம் காரோணர் கோயில் எங்கிருக்கிறது என்று கேட்டால் பரக்கப் பரக்க விழிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் எங்கிருக்கிறது என்றுதான் கேட்க வேண்டும்.

ஆம். இங்குள்ள நீலாயதாக்ஷி -கருந்தடங் கண்ணி காரோணரை விடப் பிரபலமானவள். அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது அவளது திருக்கோயில். ஆதலால் நீலாயதாக்ஷியின் பெயரைச் சொல்லியே கோயிலைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியானால் இந்தக் கோயிலுக்குக் காரோணர் கோயில் என்று பெயர் வருவானேன் என்றுதானே கேட்கிறீர்கள், அதுவா? இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் காயாரோகணர். இதற்கு முன்னமேயே இரண்டு காயாரோகணர்களைச் சந்தித்திருக்கிறோம், நமது தல யாத்திரையில் ஒன்று கச்சியில், அங்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் அல்ல. அவருக்கு என்று தனிப்பதிகம் கூட ஒருவரும் பாடவில்லை . அடுத்தவர் தான் குடந்தைக் காரோணர். இவர் கூடக் காசிவிசுவநாதர் என்ற பெயரிலேதான் வழங்கப் படுகிறார். இந்த நாகப்பட்டினத்து இறைவர் மாத்திரமே காயாரோகணர் என்ற பெயரோடேயே நிலைத்து நிற்கிறார். இவர் காயாரோகணர் என்று பெயர்