பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வேங்கடம் முதல் குமரி வரை

வடபுறம் பந்தல் காட்சி மண்டபம், தென்பக்கம் முத்தி மண்டபம். இந்த மாதிரி முத்தி மண்டபம் கயிலையிலும், காசியிலும், இக்காரோணர் கோயிலிலுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். நந்தியை வலம் வந்து இடைநிலைக் கோபுரமாம் சோழன் கோபுர வாயிலையும் கடந்தே, ராஜதானி மண்டபம் வரவேணும். இம்மண்டபத்தில் எல்லா மூர்த்திகளும் சேர்ந்து வதிவதால் இத்தலத்துக்கே சிவராஜதானி என்று பெயர் ஆயிற்றே. அந்த ராஜதானி மண்டபத்திலுள்ள தெய்வங்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டு வடபக்கம் உள்ள நீலாயதாக்ஷியைக் கண்டு தரிசிக்கலாம்.

திருவாரூரில் நீலோத்பலாம்பாள் என்னும் அல்லியங் கோதை என்றால், இங்கு நீலாயதாக்ஷி என்னும் கருந்தடங் கண்ணி-நிரம்ப வரசித்தி உடையவள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாக்ஷியுடன் ஒருங்குவைத்து எண்ணப்படுபவள். சங்கீத விற்பன்னர்களாம் தியாக ராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் மூவரும் நீலாயதாக்ஷியின் அருள் பிரபாவத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடியிருக்கிறார்கள். அதிலும் நீலாம்பரி ராகத்தில் 'அம்ப நீலாய தாக்ஷி' என்று முத்துச்சாமி தீக்ஷிதர் பாடியுள்ள கீர்த்தனம் பிரசித்தம். பாடத் தெரியுமானால் சந்நிதி முன் நின்றுபாடி சாந்நித்யம் பெறலாம். இல்லாவிட்டால் பிறர் பாடக் கேட்டாவது மகிழலாம்.

நீலாயதாக்ஷியை வணங்கிய பின்னர் அந்தப் பிரகாரத்திலுள்ள வாயிலையும் கடந்து உட்கோயிலுக்குச் செல்லலாம். அங்கு நின்று பார்த்தால் கோயில், கோபுர மில்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கோயில் என்று காண்போம். அங்குள்ள பிரகாரத்தைச் சுற்றினால் விநாயகர், ஆறுமுகன், அதிகார நந்தி, பைரவன், சந்திரன், சூரியன், புண்டரீகர், சாலீசுக மன்னன், இந்திரன் முதலிய அஷ்ட திக்குப் பாலகர்கள், சமயக் குரவர் நால்வர், மாவடிப் பிள்ளை