பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

127

கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். தமிழ் மக்களாகிய நாமுமே இப்படிப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ராணியைக் குறித்து. அத்தகைய சோழப் பேரரசிதான் செம்பியன்மாதேவி. சேர மன்னர்களுள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர். சோழ மன்னரான முதல் பராந்தக சோழரின் இரண்டாம் புதல்வரான கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசியாக விளங்கியவர். கண்டராதித்தனுக்குப் பின், அவரது தம்பியாகிய அரிஞ்சயனும், இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரச் சோழனும் அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததைக் கண்டவர்.

பின்னும் தன் அருமை மகன் மதுராந்தகன் என்னும் உத்தமச் சோழனும், சுந்தர சோழன் மகன் அருள் மொழி வர்மன் என்னும் ராஜராஜனும் ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். ஆகவே எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மாதரசி ஆறு சோழ மன்னர்கள், சோழ மண்டலத்தை ஆள்வதைக் காணும் பேறு பெற்றவர். இப்படி ஆறு சோழ மன்னர்களுக்கு உகந்தவராக விளங்கினார் என்பதற்காக மட்டும் இவர் நமது பாராட்டுக்கு உரியவர் இல்லை . வாழ்நாள் முழுதும் சிவனடி மறவாச் சிந்தையராக வாழ்ந்து, செங்கல்லால் கட்டிய பழைய கோயில்களையெல்லாம் கற்றளிகளாக மாற்றி நல்ல சிவத்தொண்டு செய்து வாழ்ந்தவர், என்பதற்காகவே இவரை நாம் நினைக்கிறோம்; போற்றுகிறோம்.

மன்னரும் மக்களும் இப் பெருமகளை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதைச் சரித்திர ஏடுகள் சொல்கின்றன. ஏன்? இவர் பெயராலேயே ஓர் ஊரையும் உண்டாக்கி அங்கு ஒரு கோயிலையும் கட்டி, பாராட்டுவதொன்றே அவர் தம் பெருமைக்குச் சான்று பகர்வதாகும். அத்தகைய நிலைத்த புகழுடைய செம்பியன் மாதேவிக்கே செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம்