பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

129

செம்மை செய்திருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள் காரிலேயே போகலாம்.

இந்த ஊருக்கு வந்து இங்குள்ள கோயில் செல்லுமுன் அந்தச் செம்பியன்மாதேவியின் வரலாறு முழுவதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா? முன்னரே தெரிந்திருக்கிறோம், இவள் மழவர் மகள் என்று. முதல் பராந்தக சோழன் மகன் ராஜகேசரி கண்டராதித்தன். இவனுக்கு மனைவியர் இருவர்; முதல் மனைவி வீரநாரணி, இரண்டாவது மனைவியே செம்பியன்மாதேவி. கண்டராதித்தன் பட்டத்துக்கு. வருமுன்னரே வீரநாரணி இறந்திருக்கிறாள். ஆதலால் செம்பியன்மாதேவியே கண்டராதித்தனது பட்டத்து அரசியாக விளங்கியிருக்கிறார். கண்டராதித்தனோ ஏதோ அரியணையில் வீற்றிருந்திருக்கிறானே ஒழிய, அவன் எண்ணமெல்லாம் இறைவன் திருவடிகளிலேதான் இருந்திருக்கிறது.

சிவபக்தியும் செந்தமிழ்ப் புலமையும் நிரம்பிய சிவஞானச் செல்வனாகவே வாழ்ந்திருக்கிறான். சிவபக்தி நிரம்பிய அரசனைக் கணவனாக வாய்க்கப்பெற்ற இவரும் சிவபக்தையாகவே வாழ்ந்திருக்கிறார். கண்டராதித்தன் சோழ மன்னனாக இருந்து அரசு செய்தது எல்லாம் ஆறு ஏழு வருஷங்கள் தாம். அப்போது இந்த அம்மையாரது திரு வயிறு வாய்த்தவரே உத்தம சோழன். இந்த உத்தமனையும் அரசியல் பற்றே இல்லாமல் சிவபக்தியில் திளைப்பவனாக வளர்த்த பெருமையும் இந்த மாதேவியையே சாரும். இவரை மக்கள் எல்லாம் மாதேவடிகள் என்றே பாராட்டி வந்திருக்கின்றனர்.

தம் கணவர் அமரரான பின் இந்த அம்மை சிவத்தொண்டுகள் செய்வதிலேயே தம் வாழ்நாள் முழுவதும் செலவு செய்திருக்கிறார். இவர் செய்யும் பணிகளுக்கு எல்லாம் இவரது கொழுந்தன்டமாரான அரிஞ்சயரும் சுந்தரச் சோழரும் துணை நின்றிருக்கிறார்கள். திருமகன் உத்தம