பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த ஒன்பது கோயில்களோடு பத்தாவது கோயிலாகத்தான் நாம் வந்திருக்கும் சிற்றூர் கயிலாயநாதர் கோயிலையும் கட்டியிருக்கிறார். அந்த நன்றி காரணமாகவே இந்த ஊரையே செம்பியன்மாதேவி என்று அழைத்திருக்கிறார்கள் மக்கள் (இதற்கு முன் அந்த ஊரின் பெயர் என்னவோ தெரியவில்லை .) இப்படிக் கோயில் திருப்பணி செய்வதோடு இவரது கைங்கர்யம் நிற்கவில்லை. இன்னும் பல கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்கும் திருவிழாக்களுக்கும் மூவர் திருப்பதிகங்கள் பாடுவோர்க்கும் நுந்தா விளக்குகளுக்கும் நந்தவனங்களுக்கும் பலப்பல நிவந்தங்கள் அளித்திருக்கிறார். பல கோயில்களுக்கு விலை உயர்ந்த அணிகலன்களோடு பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பலவகைக் கலங்களும் வழங்கியிருக்கிறார். இத்தனை அறங்களை அடுத்தடுத்து இவர் செய்து வரும்போதும், சீலமிக்க தம் கணவனை மறவாமலேயே வாழ்ந்திருக்கிறார். திரு நல்லத்தில் உமாமகேசுவரர் கோயிலைக் கட்டும்போது அங்கு தம் கணவராம் கண்டராதித்தர் சிவபூசை செய்வதுபோல் ஒரு சிற்ப வடிவம் சமைக்க அவர் மறக்க வில்லை.

செம்பியன் மாதேவியைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டபின் அங்குள்ள கைலாயமுடையார் கோயிலுள் நுழையலாம். கோயில் நாற்புறமும் நல்ல மதிலும், கோயில் வாயிலில் ஒரு திருக்குளமும் உடையதாக இருக்கிறது. கோயிலின் மதில் கிழ-மேல் 298 அடி நீளம். தென்-வடல் 267 அடி அகலம் உடையது. இது சிறிய கோயிலும் இல்லை ; பெரிய கோயிலுமில்லை. இரண்டு பிரகாரங்களோடும் திருச்சுற்று மாளிகையுடனும் அமைந்தது. கோயிலின் தோரண வாயிலின் பேரில் கட்ட முனைந்த கோபுரம் முற்றுப் பெறவில்லை. இடைநிலைக் கோபுரம் மூன்று நிலை கொண்டதாக இருக்கிறது. அதைக் கடந்து சென்றதும் செம்பியன்மாதேவியார். பெருமண்டபம் இருக்கிறது. இதில்தான் அன்றையக் கிராம சபையார் கூட்டங்கள் நடத்தி