பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

குருவியான வலியன் பூஜித்த தலம் அது. கோயில் கட்டுமலை மேல் இருக்கிறது.

பிடியதன் உரு உமை
கொளமிகு கரியது
வடிகொடு தன அடி
வழிபடும் அவரிடம்
கடி கணபதி வர
அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி
வலம் உறை இறையே

என்ற சம்பந்தர் தேவாரம் நமக்கெல்லாம் மனப்பாடம் ஆன பாட்டாயிற்றே. இன்னும் செம்பியன்மாதேவிக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் திருவிசைப்பா பெற்ற சாட்டியக்குடி என்ற தலமும் ஐந்து மைலில் கன்றாப்பூர் என்ற பாடல் பெற்ற தலமும் உண்டு. இத்துடன் கீழ் வேளூர், சிக்கல், நாகைக் காரோணம் எல்லாம் இத்தலத்தைச் சுற்றி அமைந்த கோயில்கள் தாமே. இத்தனை கோயில்களுக்கும் நடுநாயகமாகச் சரித்திரப் பிரசித்தியுடன் விளங்குவதுதான் செம்பியன்மாதேவி கயிலாயமுடையார் கோயில்.