பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வேங்கடம் முதல் குமரி வரை

பள்ளியை, ஏப்ரல் மாதம் முதல் தேதி ஆதீனத்தார் அழைப்புக்கு இணங்கிச் சென்று நானே திறந்து வைத்தேன். அன்று நினைவு கூர்ந்தேன். அதைச் சொல்லவும் செய்தேன், இப்படி நான் ஒருவனாகவே இருந்து பள்ளியை மூடவும் திறக்கவும் செய்தது போலவே, ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்பு ஒருவருக்கு இருவராக ஒரு கோயில் கதவைத் திறக்கவும் அடைக்கவும் பாடியிருக்கிறார்கள். ஆம், அப்பரும், சம்பந்தரும் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் சென்றிருந்தபோது அக்கோயில் கதவு அடைத்து வைக்கப்பட் டிருந்திருக்கிறது. கோயில் வாயிலைத் திறக்க பாடினார் அப்பர். திரும்பவும் மூடப் பாடினார் சம்பந்தர் என்பது வரலாறு. ஒரேயொரு வித்தியாசம். நான் மூடிய பள்ளியை நானே திறந்த வைத்தேன் (பாட்டு ஒன்று பாடாமலேயே). அப்பரோ வேறு யாரோ மூடிய கதவைத் திறந்து வைத்தார். அப்படித் திறந்து வைத்த கதவையே திரும்பவும் மூடப் பாடினார் சம்பந்தர், இப்படி அப்பரும் சம்பந்தரும் திறக்கவும் மூடவும் செய்த திருமறைக்காட்டுக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் தஞ்சை மாவட்டத்திலே திருத்தருப்பூண்டி தாலூகாவிலே தென் கோடியில் உள்ள ஒரு பெரிய ஊர். திருவாரூர் அறந்தாங்கி ரயில் பாதையில் ‘திருத்துறைப்பூண்டி' ஜங்கஷனில் இறங்கி மாற்று வண்டி ஏறி வேதாரண்யம் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேரலாம். இல்லை என்றால் பஸ்ஸிலோ அல்லது காரிலோ வேதாரண்யம் சென்று சேரலாம். திருத்தருப்பூண்டியிலிருந்து முப்பது முப்பத்திரண்டு மைல் தொலைவில் இருக்கிறது வேதாரண்யம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் மேற்கு நோக்கி நடந்தால் கோயிலுக்கும் செல்லலாம்.

நான்கு வேதங்களாலும் பூசித்துப் பேறு பெற்ற இடம் ஆனதால் வேதாரண்யம் என்னும் அந்தத்தலம் மறைக்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது அத்தலம். இந்தக் கோயிலுள்