பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேங்கடம் முதல் குமரி வரை

கத்திலே இம்மறைக்காட்டு உறையும் மணாளனைச் சிறப்பாக வேறே பாடிப் பரவியிருக்கிறார்.

மூரி முழங்கு ஒலிநீரானான்
கண்டாய், முழுத்தழல்போல் மேனி
முதல்வன் கண்டாய்,

ஏரி நிறைந்தனைய செல்வன்
கண்டாய், இன்னடியார்க்கு இன்பம்
விளைப்பான் கண்டாய்,

ஆரியன்கண்டாய், தமிழன்
கண்டாய், அண்ணாமலை உறையும்
எம் அண்ணல் கண்டாய்

வாரிமத களிறே போல்வான்
கண்டாய், மறைக்காட்டு
உறையும் மணாளன்தானே.

என்ற பாடலை எத்தனை தரம் பாடினாலும் உடல் புளகிக்கத் தானே செய்கிறது.

இத்தலத்தில் இந்த மணாளரையும் முந்திக்கொண்டு அருள்பாலிக்க இருப்பவர் தியாகேசர். வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்று என்பதை முன்னமேயே அறிந்திருக்கிறோம். இங்கு எழுந்தருளி இருப்பவர் புவனவிடங்கர். அவர் ஆடும் நடனம் பிருங்க நடனம். உற்சவக் காலங்களில் இவர் சதா ஆடிக்கொண்டே ஆஸ்தானம் வரை எழுந்தருளுவார் என்கிறார்கள். இந்தத் தியாகேசருக்கு எதிரே சுந்தரர் பரவையுடன் எழுந்தருளி இருக்கிறார். சேரமான் பெருமானையும்உடன் கூட்டிக் கொண்டு சுந்தரர் இங்கு வந்திருக்கிறார் என்பது வரலாறு. அவர்தான் மறைக்காட்டீசரோடு அவரது துணைவியான யாழைப் பழித்த மொழியாளையும் மறவாமல் பாடியிருக்கிறார்.