பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வேங்கடம் முதல் குமரி வரை

பாடிய பரஞ்சோதி முனிவரும், எண்ணரிய பாடல்களை எழுதிக் குவித்த தாயுமானாரும் இத்தலத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் விசுவாமித்திரர் இங்குள்ள தல விருட்சமாகிய வன்னியின் அடியில் தவங்கிடந்துதான் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றிருக்கிறார், யாக்ஞவல்கியரும் மைத்திரேயியும் இங்கு தங்கியிருந்து அவர்களது அறிவொளியைப் பரப்பினார்கள் என்றும் அறிகிறோம். நிரம்பச் சொல்வானேன்? நாம் அறிய, நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தில் உப்புச் சக்தியாகிரகம் பண்ணத் தேர்ந்து எடுத்த இடமும் இதுதானே. சர்தார் வேதரத்தினம் இன்றும் அங்கிருந்து சமூக நலப் பணிகள் பல புரிகிறார் என்பதும் நாம் தெரிந்ததுதானே.

சகர புத்திரர்களில் ஒருவனாகிய அம்சுமான் என்பவனே முதன் முதல் இந்தக் கோயிலைக் கட்டினான் என்பர். பஞ்ச பாண்டவர் தங்களது வனவாச காலத்தில் இங்கு வந்து பஞ்ச.லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்கள் என்றும் புராணம் கூறுகிறது. ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்கள் பல பிற்காலச் சோழ மன்னர்களுடையவை. விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தியதும், தஞ்சை மராத்தியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. சோழர்களால் கட்டிய கோயிலே விரிவடைந்திருக்கிறது என்று தெரிகிறோம். இத்தலத்துக்கு அருணகிரிநாதர் வந்திருக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள முருகனது திருப்புகழைப் பாடியிருக்கிறார்.

கோதில் தமிழ் கான
கும்ப முனிவற்கா மணஞ்செய்
கோலம் அளித்து ஆளும்
உம்பர் கோனே!
கோகனத்தாள் வணங்கி
கோடிமறைக் காட்மர்ந்த பெருமாளே!