பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளியிட்டிருக்கிறார் அவ்வளவுதான்' என்று வாதிடுகிறார். இருவரும் இந்த விவாதத்தைத் தீர்க்க என்னிடம் வந்தார்கள் ஒருநாள், அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்ட பின் நான் கேட்டேன் அவர்களிடம்; 'ராவுத்தன் மகனை ராவுத்தன் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று?' இதைக்கேட்டு இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். 'என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?' என்று என்னிடமே முறைத்துக் கொண்டார்கள்,

அவர்களிடம் நான் சொன்னேன் ; 'உங்களுக்குத் தெரியும் யானையை ஓட்டுபவன் மாவுத்தன் என்று. அதுபோலவே குதிரையை ஓட்டுபவனை ராவுத்தன் என்ற அழைத்திருக்கிறார்கள் தமிழர்கள். முதல் முதல் தமிழகத்துக்கு அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் குதிரைகளை ஓட்டிக் கொண்டு வந்தார்கள். குதிரைகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்களை ராவுத்தர் என்று அழைத்த தமிழர்கள் பின்னர் எல்லா முஸ்லிம்களையுமே ராவுத்தர் என்று அழைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் அறிந்த கதை. நமது சிவபெருமான் அன்று திருப்பெருந்துறையிலிருந்து மதுரைக்குக் குதிரை ஓட்டி வந்தார் என்பது. அதுவும் நல்ல கச்சவட முறையில் நரிகளையெல்லாம் பரிகளாக்கி, அந்தப் பரிகளையும் பாண்டியன் மந்திரியாகக் குதிரை வாங்க வந்த மாணிக்கவாசகருக்காக மதுரைக்கு ஓட்டி வந்திருக்கிறார்.

குதிரையை ஓட்டி வந்த ராவுத்தர் சிவபெருமான், அந்த ராவுத்தர் மகன் முருகன். ராவுத்தர் மகன் ராவுத்தனாக இருப்பதில் வியப்பில்லைதானே!' என்று விளக்கம் கூறினேன். ஒத்துக்கொண்டார்கள், அந்தச் சைவ பெருமக்கள், முருக பக்தர்கள். எங்கே, எப்பொழுது, எதற்காக இந்தச் சிவன் ராவுத்தராக மாறினார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் திருப்பெருந்துறை செல்ல வேணும். அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.