பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வேங்கடம் முதல் குமரி வரை

திருப்பெருந்துறை தஞ்சை மாவட்டத்தில் அறந்தாங்கி தாலுக்காவில் தென்கிழக்குக் கோடியில் இருக்கிறது. அங்கு செல்ல விரும்புகிறவர்கள் திருப்பெருந்துறைக்குச் செல்லவேண்டுமென்று சொன்னால் பஸ்காரர்களுக்கோ, வண்டிக்காரர்களுக்கோ தெரியாது. அந்தத் தலத்தின் பெயர் இன்று ஆவுடையார் கோயில் என்று தான் வழங்குகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேணும். இந்த ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறை செல்ல, திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையில் ரயில் ஏறவேணும், அறந்தாங்கி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ஒன்பது மைல்போக வேணும். கார் வசதியுள்ளவர்கள் காரைக்குடியிலிருந்தும் போகலாம். எப்படிப் போனாலும் அறந்தாங்கியைக் கடந்தே செல்ல வேணும். ஊர் நிரம்பச் சின்ன ஊரும் அல்ல; பெரிய ஊரும் அல்ல; ஊரின் பெருமை எல்லாம் அங்குள்ள கோயிலை வைத்துத்தான்.

இந்தத்தலத்துக்கு ஆவுடையார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா? மற்ற எல்லாச் சிவன் கோயில்களிலும் இல்லாத விசேஷம் ஒன்று இங்கு உண்டு. மற்றக் கோயில்களில் எல்லாம் கருவறையில் லிங்கத் திருவுரு இருக்கும். அம்பிகை கோயிலுள் அம்பிகை நின்று கொண்டிருப்பாள். இந்த கோயிலில் மட்டும் ஆவுடையார் என்னும் பீடம் இருக்கும், லிங்கத் திரு உரு இருக்காது. அம்பிகை சந்நிதியிலும் அப்படியே. இறைவனுக்கும் இறைவிக்கும் உருவம் என்று ஒன்று இல்லை. கோயில்களில் சமைத்து வைத்திருக்கும் உருவம் எல்லாம் கலைஞன் கற்பனையில் உருவாக்கி நிறுத்தியவையே என்பதை அறிவோம்.

அந்த உண்மையை அழுத்தமாக விளக்குகிறது இந்தக் கோயில். இறைவன் திருப்பெயர், ஆத்மநாதர்; இறைவி பெயர் யோகாம்பிகை. இருவரும் அந்தர்யாமியாகத்தான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இருவருக்கும் இருக்கும் பீடம்